ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கு விதிமுறை
அறிவிப்பு..!!
ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பல்கலைக் கழக மானியக்குழு(UGC) வெளியிட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையின்படி மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்கும் திட்டம் தொடங்கப்படும் என்று பல்கலைக் கழக மானியக் குழு (UGC) தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்தார். இந்த திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்த வழிக்காட்டு நெறிமுறைகளை UGC நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
* இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன் இதேபோல் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள், இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய முடியாது.
* ஒரு மாணவர் ஒரே நேரத்தில் ஒரு பல்கலைக் கழகத்திலோ அல்லது வெவ்வேறு பல்கலைக் கழகத்திலோ 2 பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம். ஆனால், 2 வகுப்புகளின் நேரமும் ஒரே நேரத்தில் அமையாத விதத்தில் இருக்க வேண்டும்.
* ஒரு பட்டப்படிப்பை கல்லுாரிக்கு நேரடியாக சென்றும், மற்றொரு பட்டப்படிப்பை திறந்த நிலை, தொலைதுார கல்வி முறையிலும் படிக்கலாம்
* ஆன்லைன்(Online) கல்வி முறை அல்லது திறந்த நிலை, தொலைதுார கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் 2 பட்டப் படிப்புகளையும் படிக்கலாம்.
* யுஜிசி(UGC) அல்லது ஒன்றிய அரசால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், திறந்தநிலை, தொலைதூர கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளில் மட்டுமே, இந்த படிப்புகளை படிக்க வேண்டும்.
* இது இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். முனைவர் பட்டத்துக்கான (P.hd) படிப்புக்கு பொருந்தாது.