TNPSC,TRB,VAO,GROUP EXAMS- POLITY – அவசரகால ஏற்பாடுகள்
அவசரகால ஏற்பாடுகள்
அவசரகால நிலைகளை எதிர்கொள்ளும் விதமாக மத்திய அரசு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுள்ளது அரசியலமைப்பில் மூன்று வகையான அவசரநிலைகள் பற்றி கூறப்பட்டுள்ளன,
1 தேசிய அவசரநிலை ( சட்டப்பிரிவு 352 )
போர் , வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பு , அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி அல்லது உடனடி ஆபத்து அல்லது அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் , குடியரசுத் தலைவர் , அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 352ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம் . போர் அல்லது வெளிநாட்டினர் ஆக்கிரமிப்பின் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்படும் பொழுது அது ‘ வெளிப்புற அவசரநிலை ‘ எனப்படுகிறது . ஆயுதமேந்திய கிளர்ச்சிக் காரணமாக அவசர நிலை அறிவிக்கப்படும்பொழுது அது ‘ உள்நாட்டு அவசர நிலை ‘ எனப்படுகிறது இந்த வகையான அவசரநிலைகள் 1962 , 1971 , 1975 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டன .
2 மாநில அவசரநிலை ( சட்டப்பிரிவு 356 )
ஒரு மாநிலத்தில் , மாநில அரசால் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்பொழுது அரசியலமைப்பின் விதிகளுக்கேற்ப ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது , குடியரசுத் தலைவர் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 356ன் கீழ் அவசரநிலையை அறிவிக்கலாம் . இந்த அவசரநிலை , சட்டப்பிரிவு352ன் படி நடைமுறையில் இருந்தாலும் அல்லது தேர்தல் ஆணையம் சட்டமன்றத் தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று சான்றளித்தாலும் மட்டுமே ஓராண்டைத் தாண்டியும் தொடரமுடியும் . அதிகபட்சம் அவசரநிலையின் காலம் 3 ஆண்டுகள் இருக்கமுடியும் . இந்த வகையான அவசரநிலையில் சட்டமியற்றுதல் மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் மாநிலங்கள் தங்கள் தன்னாட்சியை இழக்கின்றன . அவசரநிலை அறிவித்த பிறகு மாநில சட்டமன்றம் முடக்கப்படுகிறது . மாநிலமானது , குடியரசுத் தலைவர் சார்பாக ஆளுநரால் ஆளப்படுகிறது .
இந்தியாவில் முதன்முறையாக 1951இல் பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப்பட்டது .
3 நிதி சார்ந்த அவசரநிலை
( சட்டப்பிரிவு 360 )
நிதிநிலைத் தன்மை , இந்தியாவின் கடன் தன்மை மற்றும் இந்தியாவின் பகுதிகள் ஆபத்தில் இருந்தால் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 360ன் கீழ் குடியரசுத் தலைவர் நிதிசார்ந்த அவசரநிலையைப் பிறப்பிக்கலாம் . இந்த வகையான அவசர நிலையில் மத்திய – மாநில அரசு ஊழியர் எந்த வகுப்பினராயினும் அவர்களது ஊதியம் படிகள் மற்றும் உச்சநீதிமன்ற , உயர்நீதிமன்ற நீதிபதிகள் உட்பட அனைவரது ஊதியமும் குடியரசுத் தலைவரின் ஓர் ஆணையின் மூலம் குறைக்கப்படும் . இந்த வகையான அவசரநிலை இந்தியாவில் இதுவரை அறிவிக்கப்படவில்லை .