MOTIVATION: வறுமையை வென்ற உழைப்பின் பதக்கம் -லவ்லினா போரோகைன்..!!

 MOTIVATION: வறுமையை வென்ற உழைப்பின் பதக்கம் -லவ்லினா போரோகைன்..!!

கனவு காண்பது அனைவராலும் இயலும். ஆனால் கனவுகளைத் துரத்துபவர்களும் அதில் விடாப்பிடியுடன் முயற்சித்து வெற்றி பெறுபவர்களும் சிலராகவே உள்ளனர்.

விடாமுயற்சி:

விடாமுயற்சியுடன் போராடுவதற்கு தோல்வி, அவமானம், புறக்கணிப்பு, வறுமை என்று ஏதேனும் ஒரு புறக்காரணி உந்துதலாக இருக்கும். இதற்கு சாட்சியாக அமைகின்றார் ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலம் வென்ற அஸ்ஸாமைச் சேர்ந்த இளம் வீராங்கனை லவ்லினா போரோகைன்.

லவ்லினா போரோகைன்:

இந்திய நிலப்பரப்பில் எத்தனையோ கைவிடப்பட்ட கிராமங்களில் ஒன்றுதான் லவ்லினா பிறந்து வளர்ந்த கிராமமும். அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகாட் மாவட்டத்திலுள்ள பாரோ முகியா என்ற அடிப்படை வசதிகளற்ற கிராமத்தில் இரட்டைச் சகோதரிகளுக்கு அடுத்ததாகப் பிறந்தவர். தந்தை சிறு வியாபாரி.

பின்தங்கிய கிராமங்களில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், தனது மூன்று மகள்களையும் குத்துச்சண்டை பழக அனுமதித்துள்ளார் லவ்லினாவின் தந்தை டிகென் போகோஹெயின்.

குத்துச்சண்டை:

 குத்துச்சண்டை பழகும் அக்காக்களைப் பார்த்து வளர்ந்த லவ்லினாவும் சிறு வயது முதலே குத்துச்சண்டை மீது ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அக்காக்கள் இருவரும் தேசிய அளவில் குத்துச்சண்டையில் பங்கேற்றிருந்தாலும், பதக்கம் ஏதும் வெல்லாத கவலை லவ்லினாவிடமும் ஏற்பட்டுள்ளது. அந்தக் கவலை கனவாகவும் மாறியது.

கனவுடன் சேர்ந்து வறுமையும் துரத்தியதன் விளைவாக சிறு வயதிலேயே தமது கிராமத்திலிருந்து 4 கிலோமீட்டர் பயணித்து குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்வதை இடைவிடாது மேற்கொண்டார்.

விளையாடுவதன் மூலம் கனவை அடைவதோடு மட்டுமல்லாமல், வறுமையையும் துடைக்க இயலும் என்பதை உணர்ந்த லவ்லினா அடுத்தடுத்து போட்டிகளில் பங்கேற்று அதில் பதக்கங்களையும் வென்று தன்னை நிரூபிக்கத் தொடங்கினார்.

இந்த செய்தியையும் படிங்க…

India Medal – Olympic 2020: நான்காவது பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா.. !!

லவ்லினாவின் சாதனைகள்:

2018-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக முதல் முறையாக பங்கேற்ற லவ்லினா வெண்கலப் பதக்கம் வென்றார்.

பின்னர் அதற்கு அடுத்த ஆண்டே ரஷியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெண்கலம் வென்றார்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் அபாரமாக ஆடி 5-0 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையை வீழ்த்தி வெண்கலம் வென்றார்.

குத்துச்சண்டையில் தமது சிறப்பான பங்களிப்பின் அங்கீகாரமாக அர்ஜுனா விருதைப் பெற்றார்.

தற்போது ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 69 கிலோ வெல்டா் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியன் சின் சென்னை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார். ஆனால் இறுதிப் போட்டியில் துருக்கியின் புஷானெஸ் சுர்மெனலியிடம் தோல்வியடைந்ததால், வெண்கலப் பதக்கத்துடன் தாயகம் திரும்பவுள்ளார்.

லவ்லினா தாயகம் திரும்புவதற்காக சாலை வசதியற்ற அவரது கிராமத்தில் தற்போது அம்மாநில அரசு தார் சாலைகளை அமைத்து வருகிறது. பதக்கம் வென்று திரும்பும் லவ்லினாக்கு கொடுக்கும் பரிசாக அந்த தார் சாலை இருக்கும் என்று அவர்களின் தொகுதி எம்.எல்.ஏ. தெரிவிக்கிறார்.

லவ்லினா வென்ற பதக்கத்திற்காக நாடே பெருமைப்பட்டு வரும் நிலையில், அவரது கிராமத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமையவுள்ளதால் அக்கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் பெரும்பாலும் வசதி வாய்ப்புள்ளவர்கள் மட்டுமே விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்த்து வரும் நிலையில், கடைநிலை கிராமத்தில் பிறந்து குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார் லவ்லினா.

கல்லும் மண்ணும் சதையும் ரத்தமுமான விளையாட்டுகளை நம்பி தங்களை நிரூபிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பது, பிரபலமான பிற விளையாட்டுகளில் நடக்கும் அரசியலையே காட்டுகிறது.

எவ்வளவுதான் திறமை இருந்தாலும், தூக்கிவிடுவதற்கு ஒரு கை இருந்தால், அதனை கொழுகொம்பாக பற்றிக்கொண்டு மேலெழத் துடிக்கும் லவ்லினா போன்ற விளையாட்டு வீராங்கனைகள் எல்லா கிராமங்களிலும் இருந்துகொண்டுதான் உள்ளனர். அதற்கு மற்றுமொரு சான்று ஒலிம்பிக் பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மணிப்பூரைச் சேர்ந்த சாய்கோம் மீராபாய் சானு.

தமிழக வீராங்கனைகள்:

தமிழகத்திலும் தனலட்சுமி, சுபா, ரேவதி என மூன்று வீராங்கனைகள் இம்முறை ஒலிம்பிக் தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். அவர்கள் தோல்வியடைந்திருந்தாலும், அவர்களது குடும்ப சூழலுக்கு மத்தியில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலருக்கு பாடமாகவே மாறியுள்ளன.

இந்தியா பெற்ற 3-வது பதக்கம் :

நாட்டு மக்கள் அனைவருக்கும் 23 வயதேயான லவ்லினா சொல்லும் பாடமும் இதுவே. விஜேந்தர் சிங், மேரி கோம் ஆகியோருக்குப் பிறகு குத்துச்சண்டையில் இந்தியா பெற்ற 3-வது பதக்கம் லவ்லினாவுடையது.

ஒலிம்பிக்கில் இவர் வென்ற வெண்கலப் பதக்கம் நாட்டை பெருமைகொள்ளச் செய்வதோடு மட்டுமல்லாமல், அடிப்படை வசதிகளற்ற கிராமங்களில் விளையாட்டுக்கு அரசு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் பறைசாற்றுவதாகவே உள்ளது.

பெண்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம்:

இம்முறை ஒலிம்பிக்கில் ஆண்களை விட பெண்களே அதிக போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர். பெண்களே நாட்டிற்கு அதிகம் பதக்கம் வென்று திரும்பியுள்ளனர். இவையிரண்டும் விளையாட்டில் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தையே உணர்த்துகிறது.

Leave a Comment