COWIN: 18 – 45 வயதுடையவர்களுக்கு தொடங்கியது பதிவு – எப்படி பதிவு செய்வது..??
இந்தியாவில் 18 முதல் 45 வயதை கடந்த அனைவரும் வரும் மே 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு கோவின் செயலி மற்றும் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளும் பணி ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கியது.
இந்த செய்தியையும் படிங்க….
அதே நாளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 – 59 வயதுக்கு உட்பட்டவர்களுள் நீரிழிவு நோய், இருதய நோய் போன்ற இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசிக்காக தங்கள் பெயரை கோவின் இணையதளம் அல்லது ஆரோக்ய சேது செயலியில் பதிவு செய்யலாம் என்று அரசு அறிவித்திருந்தது.
தடுப்பூசி பெற யாரெல்லாம் தகுதியானவர்கள்?
1. இந்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டிருக்கும் அனைத்து சுகாதார மற்றும் முன்களப் பணியாளர்கள்.
2. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 01 ஜனவரி 2022-ல் 60 வயதை அடைய இருப்பவர்கள்.
3. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 01 ஜனவரி 2022-க்குள் 45 வயதை அடைய இருப்பவர்கள், தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர்கள் குழு குறிப்பிட்டிருக்கும் இணை நோய் இருப்பவர்கள் இப்போது பதிவு செய்யலாம் என சுகாதாரத் துறை வழிகாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
4. 18 வயதை கடந்த அனைவரும் மே 1 முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதற்கான ஆன்லைன் பதிவு ஏப்ரல் 28ஆம் தேதி தொடங்கியது. தனியார் மருத்துவமனைகளிலோ பரிசோதனை கூடங்களிலோ உரிய கட்டணம் செலுத்தி தடுப்பூசியை பெறலாம். அந்தந்த மாநிலங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப அரசு அறிவித்துள்ள நிலையங்களிலும் தடுப்பூசி பெறலாம்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், அரசு பரிசோதனை நிலையங்களில் தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதற்கும் கோவின் செயலியில் பதிவு செய்திருப்பது அவசியம்.
எந்த இணை நோய் இருப்பவர்கள் தகுதியானவர்கள்?
எந்த இணை நோய் இருப்பவர்கள் தடுப்பூசி பெறலாம் என்று 20 நோய்கள் மற்றும் குறைபாடுகள் உள்ள பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த ஓராண்டில் இதய நோய் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு, இதய நோய்கள் உள்ளவர்கள் ஆகியன உள்ளவர்கள் இணை நோய்கள் உடையவர்களாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், ரத்தப் புற்று நோய் உள்ளவர்கள், நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் உள்ளவர்கள், ஜூலை 1, 2020-க்கு பிறகு உடலில் புற்றுநோய் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவர்கள், தற்போது புற்றுநோய் சிகிச்சை பெறுபவர்கள், ஹெச்.ஐ.வி தொற்றுள்ளவர்கள், பெருந் தலசச்சோகை, எலும்பு மச்சை பாதிப்பு உள்ளவர்கள் உள்ளிட்ட இணை நோய்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.
தசை வலுவிழப்பு, அதீத உதவி தேவைப்படும் மாற்றுத் திறனாளிகள், பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் உள்ளவர்கள், மூச்சு விடுவதில் சிக்கல் உள்ள ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர் ஆகியோரும் இணை நோய் உள்ளவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எப்படிப் பதிவு செய்வது?
யார் வேண்டுமானாலும் கோவின் 2.0 வலைதளத்தின் மூலம் அல்லது ஆரோக்ய சேது மூலம் தடுப்பூசிக்காகத் தங்கள் அல்லது பிறரின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
1.முதலில் பதிவு செய்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் மொபைல் எண்ணைக் கோவின் இணையதளம் அல்லது ஆரோக்ய சேதுவில் உள்ளிட வேண்டும். அதனைத் தொடர்ந்து ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச் சொல் ஒன்று வரும்.
2. இந்த கட்டத்துக்குப் பிறகு, பதிவு செய்பவருக்கு என்றே தனியாக ஒரு கணக்கு உருவாக்கபடும். பயனர் கொடுத்த செல்பேசி எண்ணை வைத்து அக்கணக்கை அவர்கள் அணுகலாம். இந்த கணக்கிலேயே புதிய பயனர்களைச் சேர்ப்பது, அவர்களின் விவரங்களை மாற்றுவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள நேரத்தை குறிப்பிடுவது என எல்லாமே இந்தக் கணக்கின் மூலம் செய்யலாம்.
3. ஒரு செல்பேசி எண்ணில் இருந்து நான்கு பயனர்களுக்காக தடுப்பூசிக்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் ஒவ்வொரு பயனரும் தனித்தனியாக அடையாள அட்டையைப் பதிவேற்ற வேண்டும்.
4. ஒரு பயனர் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளும் வரை அவரது விவரங்கள் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான நேரத்தை மாற்றலாம். ஒரு முறை தடுப்பூசி செலுத்திவிட்டால் அதன் பின் எதையும் மாற்ற முடியாது.
5. அதன் பின் அடையாள அட்டையின் வகை, அடையாள அட்டை எண்கள் போன்றவையைக் கொடுக்க வேண்டும்.
அ. ஆதார் அட்டை
ஆ. வாக்காளர் அடையாள அட்டை
இ. கடவுச்சீட்டு
ஈ. ஓட்டுநர் உரிமம்
உ. பான் அட்டை
ஊ. தேசிய மக்கள் தொகை பதிவேட்டு அட்டை
எ. புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள்
6. 45 முதல் 59 வயதுடையவர்கள் இணை நோய் இருப்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்திய அரசின் வழிகாட்டு அறிக்கையில் Annexure 1(B) என அச்சான்றிதழ் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
7. முழுமையாக பதிவு செய்யும் பணி நிறைவடைந்த பின், ஒரு பதிவுச் சீட்டு வழங்கப்படும். இதை பதிவு செய்து கொள்ளும் தளத்தில் இருந்தே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பதிவுச் சீட்டு விவரங்கள் குறுஞ்செய்தி மூலமாக பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.
இரண்டாவது டோஸ் எப்போது?
முதல் டோஸ் மருந்துக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தன்னிச்சையாகவே இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு பதிவு செய்யப்படும். ஆனால் முதல் டோஸ் மருந்து செலுத்திக் கொண்டதில் இருந்து 29-வது நாள் முதல் 42-வது நாளுக்குள், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கு எப்போது வேண்டுமானாலும் ஒரு தேதியைப் பயனர்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்வதைத் தவிர்க்க முடியாது.
இந்திய சுகாதாரத் துறையின் அறிக்கைப்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பயனர்கள், தடுப்பூசி செலுத்தும் மையங்களுக்குச் செல்லும் போது ஆதார் போன்ற அரசு அங்கீகரித்திருக்கும் அடையாள அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க….
அறிகுறி இல்லாமல் வரும் ஆபத்து – இந்திய வைரஸால் உலக நாடுகள் அதிர்ச்சி..!!
இந்திய அரசின் வழிகாட்டுதல் படி, 45 வயதுக்கு மேற்பட்ட பயனர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளலாம். தனியார் மருத்துவமனைகளில் உரிய கட்டணத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.