” கடந்த ஆட்சியில் தமிழ்நாட்டில் 13,260 போலி ஓட்டுநர் உரிமங்கள்” : RTI மூலம் அம்பலம்..!!
தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சர்கள் ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டது தற்போது தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் RDO அலுவலகத்தில் 13,260 போலி ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஒருவர், தனது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கச் சென்றுள்ளார். அப்போது அவரின் எண்ணிலேயே வேறு ஒருவருக்கும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து RDO அலுவலகங்களிலும் கேள்வி எழுப்பியுள்ளார். இவரது கேள்விக்கு ஐந்து RDO அலுவலகங்கள் மட்டுமே பதில் அளித்துள்ளன.
இந்த பதிலில்தான், கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 13,260 போலி ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
திருச்செந்தூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் 1077 போலி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், கடலூரில் 4,817,
அரியலூரில் 4,534,
தாம்பரத்தில் 3,260 போலி உரிமங்கள்
வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆதாரங்களைக் கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.