தி.மு.க., தேர்தல் அறிக்கை:குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,000! சுதந்திர தினத்தில் அரசு அறிவிப்பு..??
குடும்பத் தலைவிக்கு மாதம் 1000ரூபாய் வழங்கும் திட்டம் தொடர்பாக மக்கள் அச்சம் அடைய வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் இது தொடர்பாக அறிவிப்பார் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும், எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்கவும், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்து உள்ளது.
உரிமைத் தொகை:
சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., தேர்தல் அறிக்கையில், ‘ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என, வாக்குறுதி அளிக்கப் பட்டது. தி.மு.க., ஆட்சியை பிடிக்க, இந்த அறிவிப்பு முக்கிய பங்கு வகித்ததாக, அக்கட்சியினர் நம்புகின்றனர்.ஆட்சியை பிடித்த நிலையில், தி.மு.க., அரசு, குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் தாமதம் செய்து வருகிறது.
இது, பெண்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பா.ஜ., தரப்பில், இத்திட்டத்தை உடனே செயல்படுத்துமாறு, அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அ.தி.மு.க., சார்பில், சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.உள்ளாட்சித் தேர்தல்சமூக வலைதளங்களிலும், பலர் ‘மாதம், 1,000 ரூபாய் வழங்குவது; பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைப்பது’ போன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததை விமர்சித்து, தி.மு.க.,வுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
விரைவில் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது:
இந்நிலையில், விரைவில் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடக்க உள்ளது. இதனால், குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான அறிவிப்பை, தமிழக அரசு, சுதந்திர தினத்தன்று வெளியிட முடிவு செய்துள்ளது.