பள்ளி செல்லா குழந்தைகள் :4 மாவட்டங்களில் கணக்கெடுப்பு தீவிரம்..!!
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பள்ளி செல்லா குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பில் 5,603 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் பள்ளியில் சேர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், செப்., 20ம் தேதி வரை, இந்த கணக்கெடுப்பை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், வீடு வீடாக சென்று பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணி, ஆக., 10ம் தேதி துவங்கியது. இதில், பள்ளி செல்லாத மாற்றுத்திறனாளி சிறுவர்கள் குறித்த விபரங்களும் சேகரிக்கப்பட்டன. முதல் கட்டமாக, ஆக., 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை, கணக்கெடுப்பு பணி நடந்தது.
சென்னை:
அதில் 732 குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர். இது குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது:மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவுப்படி, சென்னையில் 10 கல்வி மண்டலங்களில் 2,030 பணியாளர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டனர். 732 பள்ளி செல்லாத குழந்தைகள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 214 பேர் மாற்றுத்திறனாளி சிறுவர்கள்.
இவர்கள் அனைவரும் புதிதாக கண்டறியப்பட்டவர்கள். இதுவரை பள்ளி செல்லாத மற்றும் இடைநிற்றல் குறித்து கண்டறியப்பட்ட மொத்த மாணவர்களில் 600க்கும் மேற்பட்டோர் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கணக்கெடுப்பை, செப்., 20ம் தேதி வரை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஆகிய பகுதிகளில் வட்டார வள மையங்கள் உள்ளன. இதே போல, செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், காட்டங்கொளத்துார், திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், லத்துார், சித்தாமூர் ஆகிய பகுதிகளில் வட்டார வள மையங்கள் உள்ளன.
இந்த மையங்களில் உள்ள, வட்டார வள மைய அலுவலர் மற்றும் பயிற்றுனர்கள், கிராமங்கள் தோறும் சென்று, பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 285 மாணவர்கள்;
செங்கல்பட்டு :
செங்கல்பட்டு மாவட்டத்தில் 742 மாணவர்கள் பள்ளி செல்லாதது கண்டறியப்பட்டு, அவர்கள் அருகே உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில், பள்ளி செல்லாத குழந்தைகள் 3,844 பேர் மீட்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளர்.
மேலும், ஐ.டி.ஐ., – 30, பாலிடெக்னிக் – 830, தனியார் மையங்கள் – 319, தொழிற்கல்வி – 1,103, ஆகியவற்றிலும் இந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.