புதிய ஊதிய விதிகள்: அக்.,1 முதல் அமல்; புதிய ஊதிய விதியில் வரும் மாற்றங்கள் என்ன..??
`புதிய ஊதிய விதிகள் – 2021′:
பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த புதிய ஊதிய விதிகளை, கடந்த 2019-ம் ஆண்டில், நாடாளுமன்றத்தில் மத்திய அரசாங்கம் நிறைவேற்றியிருந்தது. கொரோனா காரணமாக இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்படவில்லை. நடப்பு 2021-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து `புதிய ஊதிய விதிகள் – 2021′ அமலுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய ஊதிய விதிகள் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஊதிய விதியின்படி அனைத்து நிறுவனங்களும் தங்களது ஊழியர்களுக்கான ஊதிய கூறுகளை மாற்றியமைத்தால் ஊழியர்கள் கையில் வாங்கும் சம்பளத்தின் (Take Home Salary) அளவு குறையும் என நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக வேலையிழப்பு, சம்பளம் குறைவு போன்ற பல காரணங்களால், மக்கள் ஏற்கெனவே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் புதிய ஊதிய விதியை அரசு அமல்படுத்துவது, மக்களின் நிதிச் சிரமத்தை மேலும் அதிகரிப்பதாகத்தானே அமையும் என்கிற கேள்வியையும் ஒருசாரர் எழுப்புகிறார்கள்.
புதிய ஊதிய விதியில் வரும் மாற்றங்கள் என்ன?
* புதிய ஊதிய விதியின் படி, ஊழியர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு 12 மணி நேரமாகவும், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாகவும் இருக்கலாம்.
* மீதமிருக்கும் 3 நாட்கள், சம்பளத்துடன் கூடிய கட்டாய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட வேண்டும்.
* இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது என்றும், புதிய ஊதிய விதி வளியுறுத்துகிறது.
* உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 நாள்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்று இதற்குமுன் இருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது
* புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் குறைந்தபட்சம் 50% இருக்க வேண்டும். வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டவை 50%-க்கு மேல் செல்லக் கூடாது.
* அடிப்படை ஊதியம் அதிகமானால் பி.எஃப் பிடித்தம் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் குறையும். ஆனால் ஓய்வுபெறும் போது கிடைக்கும் தொகை உயரும்.
* தற்போது பெரும்பாலான தொழில் நிறுவனங்களில், ஒரு நாளைக்கு 8 மணி நேரம் என்கிற அடிப்படையில், ஒரு வாரத்துக்கு 6 நாள் வேலை நாளாகவும், ஒரு நாள் கட்டாய விடுமுறை நாளாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.