நியாய விலைக் கடைகளுக்கு- தமிழக அரசு எச்சரிக்கை..??
தமிழக அரசு எச்சரிக்கை:
ரேஷன் கடைகளில் பொதுமக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
முதியவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு:
தமிழக ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் மற்றும் இலவசமாக அரிசி வழங்கப்படுவதன் மூலமாக தமிழக மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் பொங்கல் பரிசுகள், நிவாரண நிதி உள்ளிட்ட அனைத்தும் ரேஷன் கடைகளிலேயே வழங்கப்படுகின்றன. சில இடங்களில் ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அழைக்கப்படுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக, கைரேகை பதிவில் முதியவர்கள் அலைக்கழிக்கப்படுவதாக வெகுவாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்:
கைரேகை பதியாத முதியோர்களுக்கு பதிலாக குடும்பத்தை சேர்ந்த யாராவது ஒருவர் ரேகை வைத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வீடுகளில் வயதான கணவன், மனைவி மட்டுமே இருப்பதால் அவர்களே ரேஷன் கடைகளுக்கு வந்து பொருள்களை பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அவர்களையே தாலுகா அலுவலகம் சென்று வட்ட வழங்கல் அலுவலரிடம் கடிதம் பெற்று வரச் சொல்லி திருப்பி அனுப்புவதாக தெரிகிறது.
இந்த நிலையில், நியாய விலைக் கடைகளில் பொது மக்களை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத முதியவர்களுக்கு பதிலாக குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.