அரசுக்கு-தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை
சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி ஆசிரியர்களை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் நா.சண்முகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
”மத்திய, மாநில அரசுகளின் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளைத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பெரிதும் வரவேற்கிறது. மத்திய, மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவும் அளித்து வருகிறது.
அதேசயம், கரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்கள், ஆசிரியர், அரசு ஊழியர்களால் எழுப்பப்பட்டு வரும் அச்சங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தும், உயிரிழப்பு குறித்தும் அரசு விளக்கம் அளிக்க வேண்டிய தேவை உள்ளது.
கரோனா தடுப்பூசியின் உயிர் பாதுகாப்பு குறித்தும், மருந்தின் நம்பகத்தன்மை குறித்தும் அனைத்துத் தரப்பினரும் திருப்தி கொள்ளும் வகையில் விளக்கம் தரப்பட வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலைக் காரணம் காட்டி ஆசிரியர்களைக் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது. இவ்வாறு நா.சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.