‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனர் விஜய் மல்லையா நாடு கடத்தல் பிரிட்டன் திட்டவட்டம்
‘தொழிலதிபர் விஜய் மல்லையாவை சட்டப்படி தான் நாடு கடத்த முடியுமே தவிர, அவசரத்திற்காக குறுக்கு வழியை நாட முடியாது’ என, பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
‘கிங் பிஷர் ஏர்லைன்ஸ்’ நிறுவனர் விஜய் மல்லையா, பல ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனை திரும்ப செலுத்தாமல், 2016ல் பிரிட்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு கடத்த, கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, பிரிட்டன் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உறுதி செய்தது.
விஜய் மல்லையா இன்னும் நாடு கடத்தப்படாமல் உள்ளது குறித்து, பிரிட்டனுக்கான இந்திய துாதர் அலெக்ஸ் எல்லிஸ், டில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குற்றவாளி ஒருவரை நாடு கடத்துவது என்பது, நிர்வாகம் மற்றும் நீதித் துறை இணைந்து மேற்கொள்ளும் பணி. விஜய் மல்லையா விவகாரத்தை பொறுத்தவரை, நிர்வாக ரீதியில் என்ன செய்ய வேண்டுமோ அதை, பிரிட்டன் உள்துறை செயலர் செய்துள்ளார். நீதித் துறையின் பங்கும் இதில் இருப்பதால், அனைத்தும் சட்ட விதிமுறைகளின் படி தான் நடக்கும். அவசரத்துக்காக குறுக்கு வழியில் நாடு கடத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது. அது, நீதிபதிகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.