வங்கி தனியார் மயமாக்கலை கண்டித்து-வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
:”பொதுத் துறை வங்கிகளை, தனியார் வங்கிகளாக மாற்றுவதை எதிர்த்து நடக்கும், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில், 13 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்,” என, அகில இந்திய பொதுத் துறை வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு பொதுச்செயலர் மணிமாறன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:நாட்டு நலனை கருத்தில் வைத்து, பொதுத் துறை வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் கீழ், நாடு முழுதும், 1.41 லட்சம் கிளைகள் உள்ளன. நாட்டில், 75 சதவீதம் வங்கி சேவைகளை, பொதுத் துறை வங்கிகளே கையாளுகின்றன. லாபத்தை குறிக்கோளாகக் கொண்ட தனியார்மயமாக்கல், சாமானிய மக்களை பாதிக்கும்.
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கல்:
பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்கல் மட்டுமே, வங்கித் துறையின் பிரச்னைகளுக்கு தீர்வாகாது.எனவே, வங்கி தனியார் மயமாக்கலை கண்டித்து, வரும், 15, 16ம் தேதிகளில், நாடு முழுதும் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர். எனவே, இந்த முடிவை, அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இந்த வேலை நிறுத்தத்தில், 1.41 லட்சம் கிளைகளில் பணியாற்றும், 13 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில், 11 ஆயிரம் கிளைகளில், 80 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.