சர்வதேச ஆண்கள் தினத்தையும் நாம் கொண்டாடணும்-நாடாளுமன்றத்தில் விருப்பத்தை தெரிவித்த பாஜக பெண் எம்.பி(சோனல் மான்சிங்).
மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம்:
இன்று மார்ச் 8ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்காகப் பிரதமர் மோடி, தொடங்கி பல்வேறு தலைவர்களும் பெண்கள் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று பாஜக எம்.பி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இன்று பெண்கள் தினம் கொண்டாடப்படுவதால், பெண்களுக்கு வாழ்த்து தெரிவிக்க அனைவருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது.
அப்போது பேசிய பாஜக ராஜ்ய சபா உறுப்பினர் சோனல் மான்சிங், “இந்த உலகில் பெண்ணாக இருப்பது கடினமான ஒன்று. ஏனென்றால் பெண் ஒருவர் ஆண் போலச் சிந்திக்க வேண்டும், பெண் போல நடந்துகொள்ள வேண்டும், பார்க்க அழகு தேவதை போல இருக்க வேண்டும். குதிரை போல உழைக்க வேண்டும்” என்றார்.
மேலும், பெண்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், பெண்கள் தினத்தைப் போல சர்வதேச ஆண்கள் தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சோனல் மான்சிங், நமக்கு எப்போதும் உலகில் சமத்துவம் தேவை என்றார்.