பிளஸ் 2 தேர்வுக்கு வினாத்தாள் வடிவத்தை மாற்றி அகமதிப்பெண்ணை 30ஆக தேர்வுத் துறை உயர்த்த வேண்டும்-ஆசிரியர்கள் வலியுறுத்தல்.
பிளஸ் 2 தேர்வுக்கு தயாராக மாணவர்களுக்கு போதிய அவகாசம் இல்லாததால், வினாத்தாள் வடிவத்தை மாற்றி அகமதிப்பெண்ணை 30ஆகதேர்வுத் துறை உயர்த்த வேண்டும்என்று ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ல் தொடங்கி 21-ம் தேதிவரை:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 3-ல் தொடங்கி 21-ம் தேதிவரை நடத்தப்படவுள்ளது. இந்தத்தேர்வை 8.6 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது. அதேநேரம் குறைந்த காலஅவகாசத்தில் தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
வழக்கமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பரில் பாடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டுவிடும். அதன்பின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் திருப்புதல் தேர்வுகள் உள்ளிட்ட பணிகளின் மூலம் பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்யப்படுவர். நடப்பு ஆண்டு கரோனா பரவலால் பள்ளிகள் தாமதமாக ஜன.19-ம் தேதிதான் திறக்கப்பட்டன. இதைக் கருத்தில் கொண்டு பிளஸ் 2 பாடத்திட்டத்தை 40 சதவீதம் வரை குறைப்பதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், கணிதம், வணிகவியல் உள்ளிட்ட பெரும்பாலான பாடங்களில் 20 சதவீதம் வரையே நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஏப்.2-வது வாரத்துக்குள் பாடங்களை முடிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 6 மாதங்கள் நடத்தும் பாடங்களை 3 மாதத்தில் முடிக்கவேண்டிய நிலை உருவானது.
அதற்கேற்ப பாடங்களை விரைவாக நடத்திவருகிறோம். ஆனால்,அவற்றைப் புரிந்து கொள்ள முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். தற்போது நடத்தப்பட்ட முதல்பருவத்தேர்விலும் மாணவர்களின் தேர்ச்சி நிலவரம் பின்தங்கியுள்ளது.
மேலும், இதுவரை 4 பாடங்கள்வரையே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே சட்டப்பேரவை தேர்தல், செய்முறைத் தேர்வால் 15 நாட்கள் கல்விப்பணி தடைபடும். இத்தகைய நடவடிக்கைகள் மாணவர்களுக்கு மிகுந்த மனஅழுத்தத்தை உருவாக்கும். எனவே, மாற்று முடிவுகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்களின் நலன்கருதி நடப்பு ஆண்டு மட்டும் வினாத்தாள் வடிவங்களில் சில மாற்றங்களை தேர்வுத் துறை மேற்கொள்ள வேண்டும்:
ஓய்வுபெற்ற ஆசிரியர் கு.பால்ராஜ் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிகள் இணையவழி கல்வி மூலம்மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடித்துவிட்டன. ஆனால், கல்வி தொலைக்காட்சி சேவை அரசுப் பள்ளி மாணவர்களிடம் முழுமையாக சென்று சேராததால் சிக்கல் நிலவுகிறது.
போதுமான வாய்ப்புகள் வழங்காமல் தேர்வெழுத வைப்பது மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் உயர்கல்வியில் தாக்கத்தைஏற்படுத்தும். எனவே, மாணவர்களின் நலன்கருதி நடப்பு ஆண்டு மட்டும் வினாத்தாள் வடிவங்களில் சில மாற்றங்களை தேர்வுத் துறை மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி தற்போது அனைத்து பாடங்களுக்கும் அகமதிப்பீடாக 10 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதை மாற்றி செய்முறை தேர்வற்ற பாடங்களுக்கு 30-ம், செய்முறை தேர்வுள்ள பாடங்களுக்கு 15-ம் அகமதிப்பெண்ணாக உயர்த்தி வழங்கவேண்டும்.
பள்ளிகளில் நடத்தப்படும் கற்றல்செயல்பாடுகள், திருப்புதல் தேர்வுகள் அடிப்படையில் இந்த மதிப்பெண் அளிக்கப்பட வேண்டும். மேலும், பாடத்தின் பின்புற கேள்விகள் வினாத்தாளில் அதிகம் இடம்பெறச் செய்தல் வேண்டும். இவை மாணவர்கள் எளிதில் தேர்ச்சி பெறவும், மதிப்பெண் உயரவும் வழிவகுக்கும்’’ என்றார்.