தேர்தல் பணி ஆணை வழங்காமல் முறைகேடு அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளை தடுக்க சூழ்ச்சி.
தேர்தல் பணி ஆணை வழங்காமல் முறைகேடு அரசு ஊழியர்களின் தபால் வாக்குகளை தடுக்க சூழ்ச்சி:
நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்காததால், தபால் வாக்கு படிவம் அளிக்க முடியாத நிலையில் உள்ளதாக நெல்லை கலெக்டர் விஷ்ணுவிடம் ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அப்பாவு புகார் அளித்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடக்கும் நிலையில் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை. குறிப்பாக ராதாபுரம் தொகுதியில் 2 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு தேர்தல் பணிக்கான ஆணை வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு சிலருக்கு ஆணை வழங்காமல் வாட்ஸ் அப்பில் மட்டும் தகவல் அளிக்கப்பட்டு பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர்.
முதல் பயிற்சி வகுப்பின் போது தபால் ஓட்டுக்கான படிவம் வழங்கப்படும்:
அதாவது, தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு முதல் பயிற்சி வகுப்பின் போது தபால் ஓட்டுக்கான படிவம் வழங்கப்படும். அதை பூர்த்தி செய்து அவர்களது பணி ஆணையையும் இணைத்து தபால் வாக்கு பெற (படிவம் 12) விண்ணப்பிக்க வேண்டும்
ஆனால் ஒரு சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஆணை வழங்காததால் அவர்கள் அந்த பணி ஆணையை இணைக்காமல் தபால் ஓட்டுக்கு விண்ணப்பிக்கும் சூழ்நிலை உள்ளது. அவ்வாறு அவர்கள் விண்ணப்பிக்கும் போது தேர்தல் பணி ஆணை தபால் வாக்குக்கான படிவத்துடன் இணைக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி அவர்களுக்கான தபால் வாக்குகளை மறுக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த சூழ்நிலை உள்ளதா? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும். தபால் வாக்குகளை தடுக்க சூழ்ச்சி நடக்கிறது என்றார். கடந்த முறை ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அப்பாவு, 49 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.