கல்வி, ‘டிவி’ நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தவும்,பாட வகுப்புகளை அதிகரிக்கவும் உத்தரவு.
பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், கல்வி ‘டிவி’யில், பாட வகுப்புகளை அதிகரிக்குமாறு, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், கொரோனா தாக்கம் காரணமாக, 2020 மார்ச், 25 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மார்ச், 10 முதல் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டன.அதன்பின், நிலைமை சீரானதும், 10 மாதங்கள்கழித்து, ஜன., 19ல், பிளஸ் 2 வகுப்பு; பிப்., 8ல் மற்ற வகுப்புகளும் துவங்கின.இந்நிலையில், தேர்தல் காரணமாகவும், மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்ததாலும், இன்று முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2க்கு, மே, 3ல் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
அதேபோல், பள்ளிகள் மூடப்பட்டாலும், ‘ஆன்லைன்’ வகுப்புகளை தொடர்ந்து நடத்தலாம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது. இதையொட்டி, அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, ‘டிவி’ வழியாக, பாக்கி உள்ள பாடங்களை நடத்த, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.கல்வி, ‘டிவி’ நிகழ்ச்சிகளை அதிகப்படுத்தவும்,பாட வகுப்புகளை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.