கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துங்கள்- மத்திய அரசு அதிரடி உத்தரவு.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருந்த போதிலும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு அதிகரித்து கொரோனா 2 வது அலை துவங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 47,262 பேர்.
ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 275 பேர்.இந்தியாவில் இதுவரை 5,08,41,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பண்டிகை காலங்களைக் கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்டங்களுக்கேற்ப உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்க பரிசீலிக்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தொழிற்சங்க மாநில நிர்வாகிகளுக்கு சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதன்படி கொரோனாவுக்கு எதிரான போர் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளதாகவும் சமீபமாக பல பகுதிகளிலிருந்து கொரோனா பாதிப்பு மற்றும் இறப்புகள் அதிகம் பதிவாகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து ஹோலி, ஈஸ்டர், ஈத் பெருநாள் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் பொது இடங்களில் அதிகமாக கூடுவதை தடுக்க, அதிகாரிகள் அளவில் ஆலோசனை மேற்கொண்டு உள்ளூர் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மாநில தலைமைச் செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது. அதிகாரங்களைப் பயன்படுத்தி கூட்டம் கூடுவதை கட்டுபடுத்துங்கள் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டிகை கால கொண்டாட்டங்களில் ஆட்கள் கட்டுபாடு இன்றி கூடுவதை அனுமதித்தால், ஏற்கனவே ஒரு ஆண்டு காலமாக, கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்த அத்தனை முயற்சிகளும், அதனால் கிடைத்த பலன்களும் வீணாகி விடும் அபாயம் நேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.