‘பங்குனி பவுர்ணமி’-தினத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்து இரட்டிப்பு பலனை பெறலாம்.
பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வத்தை வீட்டிற்குள் இப்படி அழைத்தால், வாசலில் நிற்கும் குலதெய்வம் கூட உங்கள் வீட்டிற்குள் விரும்பி வந்துவிடும்.
பௌர்ணமி தினம்:
பொதுவாக பௌர்ணமி தினம் என்றாலே குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாள். இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம். அதிலும் பங்குனி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி தினத்தில், எல்லோரும் அவசியமாக குலதெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குலதெய்வ குத்தம் இருந்தால், குலதெய்வத்திற்கு கோபம் இருந்தால், குலதெய்வம் வீட்டிற்குள் வர முடியாத சூழ்நிலை இருந்தாலும் கூட இந்த பங்குனி பௌர்ணமி தின வழிபாட்டை மேற்கொண்டால், எல்லாத் தடைகளும் நீக்கப்பட்டு வீட்டு வாசலில் நிற்கும் குலதெய்வம், எல்லா தடைகளையும் தாண்டி நம் வீட்டிற்குள் குடி கொள்ளும் என்று சொல்கிறது சாஸ்திரம்.
வீட்டு குல தெய்வம் :
உங்கள் வீட்டு குல தெய்வம் பெண் குலதெய்வமாக இருந்தால் அதை உங்களுடைய வீட்டிற்குள் எப்படி வரவேற்பது, ஆண் குலதெய்வமாக இருந்தால் அதை உங்கள் வீட்டிற்குள் எப்படி வரவேற்பது என்பதை பற்றிய ஆன்மீக வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
வழிபாடு:
உங்களுடைய வீட்டு குல தெய்வம் எந்த குலதெய்வமாக இருந்தாலும், முடிந்தால் நாளை அந்த குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்தை தரிசனம் செய்துவிட்டு வருவது மிகவும் சிறப்பானது. குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. வீட்டில் இருந்தபடியே இந்த முறைப்படி வழிபாட்டினை செய்து பாருங்கள்.
இன்றைய தினமே உங்களுடைய வீட்டை சுத்தம் செய்து, பூஜை அறையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நாளை காலை எழுந்து சுத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் உள்ள உங்களுடைய குலதெய்வத்தின் திருஉருவப் படத்திற்கு வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
உங்கள் வீட்டின் குலதெய்வம், பெண் குலதெய்வமாக இருந்தால் அந்த குலதெய்வத்தை வேண்டி ஒரு தேங்காய் வாங்கி இன்றே, உங்களுடைய வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நாளை காலை குலதெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி வைத்து விட்டு, தனியாக மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு குலதெய்வத்திற்கு என்று தனி தீபம் ஏற்ற வேண்டும்.
அதன் பின்பு இந்த தேங்காய்க்கு மேல் நன்றாக மஞ்சளைக் குழைத்து தடவிக் கொள்ள வேண்டும். குலதெய்வத்தின் திரு உருவ படத்திற்கு முன்பாக தேங்காயை வைத்து, மனதார வேண்டி குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் வர வேண்டும் என்று அழையுங்கள். அதன் பின்பு இந்த தேங்காயை எடுத்து உடைத்து தேங்காயின் அடிப்பகுதியை தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும்.
தட்டில் பச்சரிசியை பரப்பி அதன்மேல் இந்த தேங்காய் மூடியை அமரவைத்து, தேங்காய்க்கு உள்பக்கத்தில் நெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி உங்களுடைய பெண் குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் அழைத்தால், நிச்சயமாக அந்தப் பெண் குலதெய்வம், அந்த தீபம் எரிந்து முடிவதற்குள், உங்கள் வீட்டிற்குள் வந்து அருள்புரியும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் இல்லை.
அடுத்தப்படியாக உங்களுடைய குலதெய்வம் ஆண் குலதெய்வமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும். ஒரு சிறிய பித்தளையில் இருக்கும் கலச சொம்பு எடுத்துக் கொள்ளுங்கள். செம்பு கலச சொம்பு இருந்தாலும் பரவாயில்லை. அதன் உள்ளே சுத்தமான தண்ணீரை நிரப்பி விட்டு, அந்த தண்ணீரில் மஞ்சள் பொடி, கிராம்பு 2, ஏலக்காய் 2, பச்சை கற்பூரம் சிறிதளவு, இந்த பொருட்களை எல்லாம் போட்டுக் கொள்ள வேண்டும். 5 மாஇலைகளையும் அந்த தண்ணீரில் போட்டு விடுங்கள்.
இந்த கலச சொம்பு மேல் ஒரு தேங்காயை நிற்க வைக்க வேண்டும். அந்த தேங்காய்க்கு மஞ்சள் குங்குமப் பொட்டு இட்டுக் கொள்ளுங்கள். இந்த கலசத்தை உங்கள் குலதெய்வ படத்திற்கு முன்பாக வைக்க வேண்டும். தீப தூப ஆராதனை காட்டி கலசத்தை வழிபாடு செய்துவிட்டு, ஒரு பெரிய அளவிலான கட்டி கற்பூரத்தை ஏற்றி வைத்து, அந்த கற்பூரம் கரைவதற்குள், உங்கள் வீட்டு குல தெய்வம் அந்த கலச சொம்பில் வந்து அமர வேண்டும் என்று வேண்டுதல் வைத்துக் கொள்ளலாம். நாளைய தினமே மாலை 6 மணிக்கு மேல் அந்த கலச சொம்பில் இருக்கும் தண்ணீரை உங்கள் வீடு முழுவதும் தெளித்து விட்டு, மீதம் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விடலாம்.
நிச்சயமாக உங்களுடைய வேண்டுதலின்படி குல தெய்வம் வந்து உங்கள் வீட்டில் சந்தோஷமாக குடிகொள்ளும். மற்ற நாட்களில் வழிபாடு செய்து பலன் பெறுவதை விட, இந்த பங்குனி பவுர்ணமி தினத்தில் குலதெய்வ வழிபாட்டை செய்து குலதெய்வத்தை வீட்டிற்குள் அழைத்தால், இரட்டிப்பு பலனை பெறலாம்.
மேலே சொல்லப்பட்ட விஷயங்கள் அல்லாமல் உங்கள் வீட்டின் முறைப்படி, உங்கள் குல தெய்வத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும், தாராளமாக நாளைய தினத்தில் வழிபடுவது நல்ல பலனைக் கொடுக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.