சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. இன்றைய கொரோனா பாதிப்புப்படி கடந்த 24 மணி நேரத்தில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 62,714 ஆக உயர்ந்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,19,71,624, ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,089 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12,157ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “இந்த முறை குடிசைப் பகுதிகளில் நோய் பரவல் குறைவாக உள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் தற்போது நோய் பரவல் அதிகரித்து வருகிறது. நாம் கொரோனா வைரசை தடுப்பதால், உருமாற்றம் அடைகிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது” என்றார்.