அதிகரிக்கும் கொரோனா- எச்சில் துப்பினால், மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்.
இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டு வந்த கொரோனா தொற்று மார்ச் மாதம் தொடக்கம் முதல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் 50,000க்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் அதிகளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகின்றன. அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25.64 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து வருகிறது. மராட்டியத்தில் தொற்று அதிகரிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன்படி, பொது இடங்களில் முக கவசம் அணியாமல் காணப்படும் எந்த நபருக்கும் ரூ.500 அபராதம் விதிக்கலாம். பொது இடங்களில் யாரேனும் எச்சில் துப்புவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
அதன்படி, கடற்கரை, பூந்தோட்டங்கள் உள்ளிட்ட பொது இடங்களை இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதனை மீறுபவர்கள் தலா ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவில் தெரிவித்து உள்ளது.
தொற்று அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் திரையரங்குகள், ஓட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளில் கொரோனா தொடர்புடைய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டு உள்ளது.