மிகப்பெரிய பணியான தேர்தலில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது-சென்னை உயர்நீதிமன்றம். - Tamil Crowd (Health Care)

மிகப்பெரிய பணியான தேர்தலில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்.

 மிகப்பெரிய பணியான தேர்தலில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது-சென்னை உயர்நீதிமன்றம்.

மிகப்பெரிய பணியான தேர்தலில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது. வாக்களிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் இந்த கருத்தினை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறை முழுமையடைவதில்லை:

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் தபால் வாக்குகள் பதிவு செய்யும் நடைமுறை முழுமையடைவதில்லை. இதனால் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 62,000த்திற்கும் மேற்பட்டோர் தபால் வாக்கு செலுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாக்குரிமை மறுக்கப்படக்கூடாது என்றும் 10 சதவீதத்திற்கும் மிகாமல் வாக்குகள் பதிவாகாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். இந்நிலையில் தாங்கள் வாக்களிக்க உரிய அனுமதி வழங்க வேண்டும் என்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை. தற்போதும் 100க்கும் மேற்பட்டோரின் வாக்குகள் பறிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஆசிரியர் சங்கம் தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை:

அப்போது தலைமை தேர்தல் அதிகாரி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், இதுவரை 114 பேரின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டதாகவும் நீதிமன்றம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருக்கக்கூடாது என்று தான் அறிவிருத்தியிருக்கிறது. ஆனால் தற்போதைய 114 என்பது 0.03 சதவீதம் தான் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனால் நீதிமன்ற அவமதிப்பு ஏதும் நடைபெறவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, தலைமை தேர்தல் அதிகாரிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முழுமையாக முடித்துவைத்திருக்கிறார்கள். அதேசமயம் மிகப்பெரிய பணியான தேர்தலில் அரிதான தவறுகளை நீதிமன்ற அவமதிப்பாக கருதி நீதிமன்றத்தை நாடக்கூடாது என்றும் மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Leave a Comment