கரோனா இரண்டாம் அலை -இளைஞர்களை குறிவைக்கிறதா? - Tamil Crowd (Health Care)

கரோனா இரண்டாம் அலை -இளைஞர்களை குறிவைக்கிறதா?

 கரோனா இரண்டாம் அலை -இளைஞர்களை குறிவைக்கிறதா?

 கரோனா இந்த ஆண்டுத்தொடக்கத்தில் குறையத் தொடங்கிய நிலையில், மார்ச் மாதம் முதல் நிலைமை தலைகீழானது. இதனால் இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை வீசுமோ என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் நிபுணர்கள்.

 மற்றுமொரு எச்சரிக்கையையும் மருத்துவர்கள் விடுத்துள்ளனர்:

 இந்தியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலையின்போது, பெரும்பாலான கரோனா நோயாளிகள் வயதானவர்களாக இருந்ததைப் போல அல்லாமல், இரண்டாவது அலையின் வேகம், வீரியம் மாறுபட்டு இருப்பதாகவும், தற்போது கரோனா உறுதி செய்யப்படுவோரில் பெரும்பகுதியினர் 20 – 39 வயதுக்கு உள்பட்டவர்களாக இருப்பதாகவும் பெங்களூரு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பெங்களூரு மாநகராட்சி வெளியிட்டிருக்கும் புள்ளி விவரத்தில், மார்ச் 17 மற்றும் 26-ஆம் தேதிகளில் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 2,408 பேர் 20 – 29 வயதுடையவர்களாகவும், 2,547 பேர் 30 – 39 வயதுடையவர்களாகவும் இருந்தனர். அதேவேளையில் 1,178 பேர் 60 – 69 வயதுடையவர்களாகவும், 828 பேர் 70 வயதுடையவர்களாகவும் இருந்தனர்.

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான மக்களின் மனநிலை மாறியிருப்பதும், கரோனா தொற்று உருமாறி, வீரியம் மிக்கதாக மாறியிருப்பதும் கூட, இந்த மாற்றத்துக்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கரோனா முதல் அலையின்போது, மக்களிடையே மிகுந்த அச்ச உணர்வு காணப்பட்டது. பொதுமுடக்கக் காலங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சினர். கரோனா நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றினர். ஆனால் தற்போது தடுப்பூசி வந்துவிட்டது என்ற எண்ணமும், நெறிமுறைகளை பின்பற்றாததும், கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவக் காரணமாகி வருகிறது.

மேலும், கரோனா தடுப்பூசி காரணமாக முதியவர்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கலாம். எனவே, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கான வயது வரம்பை 35 வரை குறைக்கலாம் என்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இளம் வயதினர், அதிகளவில் வெளியில் பொதுவிடங்களுக்கு வந்து செல்வதால், அவர்களுக்கு அதிகளவில் கரோனா பரவக் காரணமாக இருக்கலாம். கரோனா நெறிமுறைகளை அவர்கள் முறையாகப் பின்பற்றாததும் ஒரு முக்கியக் காரணம் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

வரும் வாரங்களில் கரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதால், கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Leave a Comment