குறிப்பிட்ட காலத்திற்குள் உபரி ஆசிரியர்களுக்கு பணி: ஐகோர்ட் கிளை உத்தரவு.
உபரி ஆசிரியர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பணி வழங்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் நியமனங்களை அங்கீகரிக்க மறுப்பதை எதிர்த்தும், அங்கீகரிக்கக் கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
கட்டாய கல்வி சட்டப்படி ஆசிரியர் – மாணவர் விகிதம் 1:30 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். பணியிடம் என்பது ஒவ்வொரு பள்ளியையும் தனி அலகாக பார்க்க வேண்டும். பல பள்ளிகளை சேர்த்து ஒரே அலகாக பார்க்கக் கூடாது. உபரி ஆசிரியர் பணியிடம் ஏற்பட்டால், குறிப்பிட்ட காலத்திற்குள் அந்த உபரி ஆசிரியருக்கு பணி வழங்க வேண்டும்.
அதன் பிறகும் உபரி ஆசிரியர்கள் இருந்தால் அவர்களை மாவட்டத்தில் உள்ள பிற பள்ளிகளில் நிரப்ப வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் அக்.15க்குள் நிரப்பும் பணியை முடிக்க வேண்டும். 2 மாதத்திற்குள் உபரி ஆசிரியர் பணியிடங்களை கணக்கெடுத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த உத்தரவுகளை நிறைவேற்றியது குறித்து, பள்ளி கல்வித்துறை சார்பில் அறிக்கையளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ள நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.