பிளஸ்-2 வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் : 7-ந்தேதிக்கு பிறகு பள்ளிகளை மூட திட்டம்- தமிழக அரசு பரிசீலனை.
கொரோனா பரவலால் பிளஸ்-2 தேர்வை ஜூன், ஜூலை மாதத்துக்கு தேர்வு தள்ளிப்போகலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவியதையடுத்து பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப் பட்டன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் ஜனவரி மாதம் 19-ந்தேதி முதல் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 ஆகிய மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்தன.
கொரோனாவுக்காக பல விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகளை நடத்தினார்கள். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஷிப்ட் அடிப்படையில் வகுப்புகள் நடந்தன.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து 9-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்பிறகு அவர்களுக்கான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது தேர்தலுக்காக பள்ளிக் கூடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே வருகிற 7-ந்தேதி வரை பிளஸ்-2 மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அதன்பிறகு பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பள்ளிகளை திறக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதன் காரணமாக 7-ந்தேதிக்கு பிறகு பிளஸ்-2 நேரடி வகுப்புகளையும் ரத்து செய்வதற்கு மாநில அரசு பரிசீலித்து வருகிறது. ஆன்லைன் மூலமே தொடர்ந்து வகுப்புகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே மே 2-ந்தேதி பிளஸ்-2 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்படலாம். எனவே ஜூன், ஜூலை மாதத்துக்கு தேர்வு தள்ளிப்போகலாம் என்று கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்போது ரிவிஷன் தேர்வு நடந்து வருகிறது. ஒரு வேளை பொதுத்தேர்வு நடத்த முடியாவிட்டால் ரிவிஷன் தேர்வு மார்க் அடிப்படையிலேயே தேர்ச்சிகளை அறிவிக்கலாம் என்றும் கூறுகின்றனர்.