தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2021 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்) - Tamil Crowd (Health Care)

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2021 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)

 தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் – 2021 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்).

2021-ஆம் ஆண்டுக்கான தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை)

  • முதல் பாதம் முடிய)சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் விருப்பங்கள் படிப்படியாக நிறைவேறத் தொடங்கும். புதுவித அனுபவங்கள் மூலம் எதிர்பார்த்த மாற்றங்கள் தானாகவே தேடிவரும். பணப்புழக்கம் இரட்டிப்பாகத் தொடங்கும். செய்தொழிலில் புதிய லட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
  • உடன் பிறந்தோரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். மழலை பாக்கியத்தை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்வீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து சுபச் செய்திகள் வந்து சேரும். ஆன்மிகத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். தர்ம காரியங்களிலும் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்ய வாய்ப்புகள் தேடிவரும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.
  • ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வந்தாலும் கடினமாக உழைக்க நேரிடும். மற்றபடி செய்தொழில் வளர்ச்சி அடையும். நல்லவர்களின் உறவும், நண்பர்களின் உதவியும் கிடைத்து வெற்றிகரமாக உங்கள் காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்திலிருந்த கெடுபிடிகள் குறையும். பூர்வீகச் சொத்து விஷயங்களில் இருந்து வந்த தடைகள் மறைந்து சுமூகமான பாகப்பிரிவினை உண்டாகும்.
  • பெற்றோர்களுடனும் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். செய்தொழிலில் கண்ணியத்தைக் காப்பீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன்களும் திரும்ப கை வந்து சேரும். நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொண்டு உங்கள் காரியங்களை நடத்திக் கொள்வீர்கள். உங்கள் செயல்களைத் திட்டமிட்டு செய்து சரியாக முடித்துவிடுவீர்கள். குடும்பத்திலும் அமைதி நிறையும்.
  • உத்தியோகஸ்தர்கள் இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்புடன் நிர்ணயித்த காலத்திலேயே முடித்து கொடுத்துவிடுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு மேலதிகாரிகளின் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். பணவரவும் சற்று கூடும். சக ஊழியர்களின் உதவியையும் பெறுவீர்கள்.
  • வியாபாரிகளுக்கு வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெறுவதால் பொருளாதாரம் உயர்வு பெறும். தாங்களே நேரடியாக வியாபாரத்தைக் கவனிப்பதால் வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய ஆதரவைப் பெற்று விடுவீர்கள். உங்களின் அறிவுத்திறமையால் சந்தையில் போட்டியை எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள்.
  • விவசாயிகள் கூடுதலாக வருமானம் வருவதற்கு அதிக அளவில் பழ வகைகள், காய்கறிகள், கிழங்குகள் எனப் பயிரிடுவீர்கள். நீர்வரத்தும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து பயன் அதிகமாகப் பெறுவீர்கள். புதிய உபகரணங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள்.
  • அரசியல்வாதிகளுக்கு இடையூறுகள் பல உங்கள் நண்பர்கள் மூலமாகவே வரக்கூடும். ஆனால் அனைத்தையும் நொறுக்கித் தவிடு பொடியாக்கி விடுவீர்கள். மனம் திறந்து எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் கொட்டி விடாதீர்கள். அனைவரும் உங்களது பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள்.
  • கலைத்துறையினருக்கு சக கலைஞர்கள் உதவியால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சில தடைகளை மீறி கையெழுத்திடுவீர்கள். உங்கள் கடமையை உணர்ந்து செயல்படும் காலமாக இது இருக்கும்.
  • பெண்மணிகளுக்கு வெளிவட்டாரத்திலும் செல்வாக்கு உயரும். கணவரின் பாசம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். ஆடைகளும், ஆபரணங்களும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். இல்லத்தின் பொறுப்பையும் உணர்ந்து நடப்பீர்கள்.
  • மாணவமணிகள் பெற்றோர்களின் ஆதரவுடன் தங்கள் கோரிக்கைளை நிறைவேற்றிக் கொள்வார்கள். வெளிநாட்டுத் தொடர்பான படிப்பில் சேருவதற்குத் தயார்படுத்திக் கொள்வீர்கள். மொத்தத்தில் உங்களுக்கு இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் (பிலவ வருடத்தில்) அனைத்து நலன்களும் கிட்டும்.
  • பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  • சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை விரிவுபடுத்த சிந்தித்து முடிவெடுப்பீர்கள். புதிய முதலீடுகளையும் நண்பர்களுடன் சேர்ந்து செய்வீர்கள். தேவைக்கேற்ற வருமானத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
  • குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். குழந்தைகளை வெளிநாடுகளுக்கு கல்வி கற்க அனுப்புவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் புகழ் உயரக் காண்பீர்கள். குடும்பத்தை விட்டு விலகி இருந்தவர்கள் மீண்டும் வந்து குடும்பத்துடன் இணைவார்கள். உங்கள் செயல்களில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும்.
  • போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் சுகங்கள் கூடத்தொடங்கும். பெற்றோருடன் கருத்தொற்றுமை மேலோங்கும். இதமாகப் பேசி உங்கள் காரியங்களைச் சுலபமாக முடித்துக் கொள்வீர்கள். நெடுநாளாக அனுபவித்து வந்த உடல் உபாதைகள் நீங்கிவிடும். விரோதம் பாராட்டிய நண்பர்களும், உற்றார் உறவினர்களும் நேசக்கரம் நீட்டுவார்கள்.
  • செய்தொழிலை மேம்படுத்த பயணங்கள் செய்வீர்கள். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடனுதவிகள் கிடைக்கும். அதே நேரம் அரசாங்க அதிகாரிகளிடம் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளவும். உங்கள் பேச்சுகள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். தந்தை வழி சொத்துகளில் இருந்த பிரச்னைகள் அகன்று அவைகளிலிருந்து வருமானம் வரத்தொடங்கும்.
  • உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் சிறிது பிரச்னை செய்தாலும் உங்கள் திறமையால் அவைகளைச் சமாளித்து விடுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயல்படவும். மற்றபடி வருமானம் தேவைக்கேற்ப வந்து சேரும். சுபகாரியங்கள் உங்கள் எண்ணப்படியே நடந்தேறும்.
  • உத்தியோகஸ்தர்கள் உங்கள் வேலைகளை உரிய நேரத்தில் திட்டமிட்டுச் செய்வீர்களேயானால் குழப்பங்களிலிருந்தும், பதற்றத்திலிருந்தும் விடுபடுவீர்கள். வேலையை செவ்வனே முடித்து, மேலதிகாரிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். அதே நேரம் படபடவென்று அதிகம் பேசாமல் சில சமயங்களில் மௌனம் காப்பது உத்தமம்.
  • வியாபாரிகள் அநாவசியச் செலவு செய்யாமல் சிக்கனமாக இருந்து வியாபாரத்தில் புதிய மாற்றங்களைச் செய்வீர்கள். கூட்டு வியாபாரமும் மேன்மை அடையும். அதே நேரம் எல்லா முடிவுகளையும் நண்பர்களைக் கலந்தோலோசித்த பிறகே எடுக்கவும்.
  • விவசாயிகளுக்கு பயிர்கள் தழைத்தோங்கி வளரும். இருந்தாலும் புழு, பூச்சிகளுடன் வளர்ந்தால் உடன் பூச்சிக் கொல்லி மருந்தைத் தெளிக்கவும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளைச் செய்வீர்கள்.
  • அரசியல்வாதிகள் தங்கள் கட்சியின் கட்டளைகளைத் தீவிரமாக நிறைவேற்றி நல்ல பெயர் எடுத்துக் கொள்வீர்கள். அந்தஸ்து உயரும். கட்சியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். மற்றபடி உங்களை எதிர்ப்பவர்கள் பணிந்து போகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
  • கலைத்துறையினர் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உங்களுக்குத் தகுதியானவர்களிடம் மட்டுமே பேச்சைத் தொடர்வீர்கள். திறமைக்கேற்ற புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். ரசிகர்கள் அலட்சியப் படுத்தினாலும் கண்டுகொள்ளாதீர்கள்.
  • பெண்மணிகளுக்கு பேச்சில் கவனம் தேவை. உங்கள் உடைமைகளைப் பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். ஆன்மிகத்தில் ஈடுபாடு ஏற்பட்டு புதிய பலத்துடன் மனத்தெம்பையும் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களைச் சற்று அனுசரித்துச் செல்லவும்.
  • மாணவ மணிகள் புதுப்புது மொழிகளைக் கற்பீர்கள். சிலருக்கு மேற்படிப்பைத் தொடர வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கும். கல்வியிலும் மேன்மை பெறுவீர்கள். வெளி விளையாட்டுகளிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோர் சொற்படி நடப்பது நல்லது.

பரிகாரம்: துர்க்கை வழிபாடு உகந்தது.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  • சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரை உள்ள காலகட்டத்தில் அரசாங்கத்திலிருந்த கெடுபிடிகள் குறையும். உங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களுக்குத் தொல்லை கொடுத்தவர்களை உடனுக்குடன் மன்னித்து விடுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். அனைவரும் உங்கள் செயல்திறனைப் பாராட்டுவார்கள்.
  • எதிர்பார்த்த அளவுக்கு வருவாய் இல்லையென்றாலும் தேவைக்கேற்ப தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். சுபகாரியங்களைச் சாதுர்யத்துடன் நடத்தி முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்றிவிடுவீர்கள்.
  • ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவியினால் செய் தொழிலில் புதிய உயரத்தை எட்டுவீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களைப் பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது உங்கள் பெயர் கெடாமல் வெளிப்படையாகச் செயல்படுவீர்கள். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.
  • நெடுநாளாக தடைப்பட்டிருந்த காரியங்களைத் தூசித்தட்டி செயல்படுத்துவீர்கள். புதியவர்களின் நட்பு கிடைக்கும். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வந்து மருத்துவத்தினால் குணமடைந்துவிடும். உங்கள் செயல்களைச் சிறப்பாகச் செய்ய பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். தக்க நேரத்தில் உறவினர்களும் கை கொடுப்பார்கள்.
  • புதிய நுணுக்கங்களையும் அறிந்து கொள்வீர்கள். உங்களின் கற்பனை சக்தி அதிகரிக்கும். வாழ்க்கை துணைவர் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவார்.
  • மனதில் இருந்த குழப்பங்கள் பெரியவர்களின் ஆலோசனைகள் மூலம் விலகும். சிலருக்கு அசையும், அசையாச் சொத்துகள் வாங்கும் யோகமும் உண்டாகும். வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து பழைய கடன்களை அடைத்து விடுவீர்கள். மேலும் வெளிநாட்டு சம்பந்தத்துடன் செய் தொழிலில் அபிவிருத்தி உண்டாகும் காலகட்டமிது.
  • உத்தியோகஸ்தர்கள் தமிழ்ப் புத்தாண்டில் உங்கள் வேலைகளைக் கவனம் சிதறாமல் பட்டியலிட்டுச் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளால் பாராட்டைப் பெற்று ஊதிய உயர்வையும் சலுகைகளையும் பெறுவீர்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வேலைகள் யாவும் சுமுகமாக முடியும்.
  • வியாபாரிகளுக்கு கூட்டுத் தொழில் லாபம் தராது. சுக துக்கங்களை மறந்து கடமையைப் பெரிதாக மதித்து உழைத்தீர்களானால் நன்றாக முன்னுக்கு வரலாம். போட்டிகளையும் முட்டுக் கட்டைகளையும் தகர்த்தெறிந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். நேரடி பார்வையில் வியாபாரம் நடக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
  • விவசாயிகளுக்கு நீர் வளத்தால் உங்கள் முயற்சிகள் பலிதமாகும். வங்கிகளிடமிருந்து கடன் பெற்று புதிய குத்தகைகளை எடுப்பீர்கள். விளைச்சல் அதிகரித்து லாபம் பெருகும். வழக்குகள் சாதகமாகும்.
  • அரசியல்வாதிகளுக்கு இந்தக் காலகட்டத்தில் சில குறுக்கீடுகள் இருக்கும். அவற்றைச் சமாளிக்க மனம் தளராமல் பாடுபட்டு உங்கள் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வீர்கள். தொண்டர்களின் பலம் ஓங்கியிருக்கும். மேலிடத்தின் ஆதரவைப் பெற்றாலும், அதை முழுமையாக அனுபவிக்க விடாமல் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படும்.
  • கலைத்துறையினருக்கு வருமானம் சற்று உயர்ந்தாலும் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும். ரசிகர்களுக்கும் சிறிது செலவு செய்வீர்கள். சக கலைஞர்கள் சற்று ஒதுங்கி இருப்பார்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.
  • பெண்மணிகள் தங்கள் குடும்பத்தில் சுற்றத்தார் வளம்பெறக் காண்பார்கள். உங்களின் செவியில் நல்ல செய்திகள் வந்து மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். புதுப் புது ஆடை அணிகலன் சேர்க்கை உண்டாகும்.
  • மாணவமணிகளுக்கு நண்பர்கள் கைகொடுப்பார்கள். மனதை அலைபாய விடாமல் படிப்பில் கவனம் செலுத்தவும். இறை சிந்தனை மேலோங்கும். பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் நல்ல பெயர் எடுப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் கவனத்துடன் ஈடுபடவும்.

பரிகாரம்: சனி பகவானை வழிபட்டு வரவும்.


கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  • சித்திரை மாதம் முதல் புரட்டாசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை சரியாக நடத்துவீர்கள். உங்கள் காரியங்களில் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.
  • உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்து இருப்பதைத் தவிர்த்து விடுவீர்கள். உங்கள் முகத்தில் வசீகரமும் அழகும் உண்டாகும். சமூகத்தில் உயர்ந்தவர்களைச் சந்திக்கும் பொழுது நன்றாக சிந்தித்து கவனமாகப் பேசவும். எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தருவதோ, கடன் கொடுப்பதோ, முன் ஜாமீன் போடுவதோ இந்தக் காலகட்டத்தில் கூடாது. ஐப்பசி மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.
  • வெளிநாடு தொடர்பான தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். உடன் பிறந்தோரின் ஆதரவும் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பொருளாதாரத்தில் பெரிய அளவில் லாபங்களைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் குறைவு ஏற்படாது. மனதும் உடலும் உற்சாகத்துடன் இருக்கும்.
  • உங்களின் தனித்தன்மையும், தன்னம்பிக்கையும் வெளிப்படும்.பழைய கடன்களைத் திருப்பி அடைத்து விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். செய்தொழிலில் உண்மை, நியாயம் போன்றவைகளைக் கடைப்பிடித்து அனைவரிடமும் நற்பெயர் வாங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
  • உத்தியோகஸ்தர்களுக்கு இந்தப் புத்தாண்டில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் எடுப்பதற்கு மிகவும் கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் வேலைகளை முடித்துக் கொடுக்க வேண்டியிருக்கும். அதிக உழைப்பை நல்குவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்து வந்த விரோதம் தீர்ந்து, அவர்களுடன் சுமுகமாகப் பழகுவீர்கள். மேலதிகாரிகள் உங்கள் திறமையைப் புரிந்துகொண்டு உங்களின் உண்மையான கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.
  • வியாபாரிகள் நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் செல்வீர்களானால் வியாபாரத்தைப் பெருக்கலாம். கொடுக்கல் வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் சந்தோஷம் பெருரும். கடன் கொடுக்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கையுடனும், நன்கு விசாரித்தும் கொடுக்கவும்.
  • விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருப்பதால் மகிழ்ச்சியாக புதிய கழனிகளை வாங்குவீர்கள். விவசாயத்தைச் செய்வதற்கு முன் நன்கு திட்டமிடுவீர்கள். தீவிரமான கடின உழைப்பால் புதிய காய்கறிகளைப் பயிரிட்டு, விவசாயத்தைப் பெருக்குவீர்கள். கால்நடைகளாலும் லாபம் பெருகும்.
  • அரசியல்வாதிகளுக்கு உங்கள் முயற்சிகளுக்கான முழுப் பலனும் படிப்படியாகக் கிடைக்கத் தொடங்கும். அதே நேரத்தில் வேற்றுக் கட்சியினரிடம் இருந்து தள்ளியே இருக்கவும். வீண் அபவாதங்களுக்கு ஆளாக நேரிடலாம். பயணங்களால் நன்மை அடைவீர்கள். மக்கள் பிரச்னைக்காக நீங்கள் காரியமாற்றும் விதம் எதிர்க்கட்சியினராலும் புகழப்படும். கட்சி மேலிடத்திலிருந்து நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.
  • கலைத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். புகழ் கூடும். கைநழுவிப் போன வாய்ப்புகள் மறுபடியும் கைவந்து சேரும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். எதிர்காலத் தேவைகளுக்கு வித்திடுவீர்கள்.
  • பெண்மணிகளுக்கு புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மனதை அலைபாயவிடாமல் பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
  • மாணவமணிகளுக்கு பயமும் பதட்டமும் அதிகரிக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு இருப்பதால் உங்கள் தனித் திறமை வெளிப்படும். யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து மனப்பாடம் செய்து வரவும். எதிர்பார்த்த வெற்றி இலக்கை எட்டும்படி இந்தப் புத்தாண்டு அமையும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும்.

Leave a Comment