ஏப்ரல் 14 முதல் 16 வரை தமிழகத்தில் தடுப்பூசி திருவிழா – தடுப்பூசி மையங்கள் அதிகரிப்பு இல்லை..!!
பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தலின் படி அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. தமிழகத்தில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெறுகிறது.
தினசரி தற்போது 1.25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த எண்ணிக்கையை 2 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், நகர்புற மற்றும் கிராமப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட 1900 மினி கிளினிக்குகள், தடுப்பூசி செலுத்த அனுமதி பெற்ற தனியார் மருத்துவமனைகள் என 4328 மையங்கள் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இதில் 3797 மையங்களில் கோவிட் ஷீல்டு தடுப்பூசியும் 531 மையங்களில் கோவேக்சின் தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது. இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு தினமும் தடுப்பூசி போட முடியும். ஆனால் தற்போது 1.25 லட்சம் பேர் மட்டுமே போட்டுக் கொள்கின்றனர். எனவே தடுப்பூசி திருவிழாவுக்கு என தனியாக பிரத்யேக மையங்கள் திறக்கப்படவில்லை.
ஜனவரி 16 ஆம் தேதி 600 மையங்களில் தொடங்கப்பட்ட இத்தடுப்பூசி போடும் பணி தற்போது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு 4328 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது. தற்போது வரை 6,83,419 சுகாதாரப்பணியாளர்கள், 6,67,296 முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 13,27,811 பேர், 45 முதல் 60 வயதுக்குட்பட்டோரில் 12,65,479 பேர் என மொத்தம் 39,44,005 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.
இந்த செய்தியையும் படிங்க…
ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு: ஒரே நாளில் 10 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!
எனவே, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை இன்னும் மக்கள் மத்தியில் வேகமாக கொண்டு செல்லும் முயற்சியாகவே 4 நாட்கள் கோவிட் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி போடப்பட உள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின் படி , தகுதியான அனைவருக்கும் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த வைப்பதே இத்திருவிழாவின் நோக்கமாகும்.
தவிர, அதிக நபர்களுடன் பணிபுரியும் தொழில் நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றிலும் தடுப்பூசி முகாம்களை தேவைக்கேற்ப நடத்த சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. விருப்பமுடைய நிறுவனங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கங்கள் உள்ளாட்சித்துறை மற்றும் அப்பகுதி நகர் நல அலுவலர்கள் மூலமாக இதற்கான கோரிக்கைகளை முன்னெடுக்கலாம்.