பிங்க் வாட்ஸ் ஆப் அபாயம்-சைபர் கிரைம் எச்சரிக்கை..!!
பிங்க் வாட்ஸ் ஆப் எனும் பெயரில் ஒரு சிலரது மொபைல் போன்களுக்கு வரும் லிங்குகள் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த சம்பவம் நடந்து வருகிறது.
பிங்க் வாட்ஸ்அப் என்று வரும் லிங்கை ஏதோ அவசரத்தில் கிளிக் செய்து அதன் பின்னர்தான் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த லிங்கை கிளிக் செய்ததும் செல்போனில் உள்ள மொத்த தொடர்பு எண்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அழிந்து போய்விடுகின்றன. இதனால் பலரும் அதிர்ந்து போய் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு இதுபற்றிய தகவல்களை சொல்லி எச்சரித்து வருகின்றனர்.
பலரும் இப்படி பாதிக்கப்பட்டு வருவதால் இது புகார் ஆகி மெல்ல காவல்துறைக்கும் இந்த புகார் சென்றிருக்கிறது. இது வாட்ஸ்அப் நிறுவனத்தின் அறிவிப்புதான் என்று நினைத்து பலரும் அந்த லிங்க்கை கிளிக் செய்கின்றனர். ஆனால் அது வாட்ஸ்அப் நிறுவனம் அனுப்பும் லிங்க் அல்ல. புதுவகையான வைரஸ். இந்த வைரசை அனுப்பி செல்போனில் உள்ளவற்றை ஹேக்கிங் செய்வது திருடர்களின் எண்ணம்.
பிங்க் வாட்ஸ்அப் என்று கூறி வரும் லிங்குகளை தொட வேண்டாம் என்று தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர் சைபர் கிரைம் நிபுணர்கள். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் செயலிகளை மட்டுமே தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். பொதுவாக லிங்குகள் வழியே வரும் செயலிகளை தரவிறக்கம் செய்யக் கூடாது என்றும் எச்சரிக்கின்றனர் சைபர் கிரைம் நிபுணர்கள்.
பிங்க் வாட்ஸ்அப் என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரில் ஆப்களை பதிவிறக்கம் செய்யுமாறு லிங்குகள் வந்தால் அவற்றை பகிரவும் தரவிறக்கம் செய்யவும் வேண்டாம் என்று எச்சரிக்கின்றார் சென்னை அடையாறு துணை ஆணையர் விக்கிரமன். அறியாமல் அப்படி வரும் லிங்கை கிளிக் செய்தால் உங்களது தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு விடக் கூடும் என்றும் எச்சரிக்கின்றார்.