1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பாட பயிற்சி கட்டகம், புத்தகம் தயார்; கல்வி தொலைகாட்சிகளில் ஒளிபரப்ப கல்வித்துறை உத்தரவு..!!
பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரி செய்யும் பொருட்டு 2ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்பு பாட பயிற்சி கட்டகமும் (பிரிட்ஜ் கோர்ஸ்), 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி புத்தகமும் (ஒர்க் புக்) உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க
10 – ஆம் வகுப்புக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு : பள்ளிக் கல்வித் துறை..!!
இணைப்பு பாட பயிற்சி கட்டகம் 2 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு தொகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. தொகுதி ஒன்றில் தமிழ், ஆங்கிலம் பாடங்களும், தொகுதி 2ல் அறிவியல் சமூக அறிவியல் பாடங்களும், கணித பாடம் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் பிரிவு முதல் தொகுதியிலும், இரண்டாம் பிரிவு இரண்டாம் தொகுதியிலும் இடம்பெற்றிருக்கும். ஒவ்வொரு பாடமும் 10 நாட்கள் பயிற்சி அளிக்க கூடிய வகையில் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி புத்தகம் ஒரு பாடத்திற்கு ஒரு புத்தகம் என்ற அடிப்படையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தயாரிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கான பதில்களை பயிற்சி புத்தகத்திலேயே மாணவர்கள் பதிவு செய்யக்கூடிய வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இணைப்பு பயிற்சி கட்டகம் மற்றும் பயிற்சி புத்தகம் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை வலுவூட்டவும், தாமாகவே பயிற்சி செய்து கற்பதற்கும் பெரிதும் உறுதுணை செய்யும்.
தற்போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் அறிவுரைப்படி மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக இணைப்பு பாட பயிற்சி கட்டகமும், இரண்டாம் கட்டமாக பயிற்சி புத்தகமும் காணொலி வடிவில் தயாரிக்கப்பட்டு கல்வி தொலைகாட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக இணைப்பு பாட பயிற்சி கட்டகம் ஏப்ரல் 22 முதல் மே 10ம் தேதி வரை ஒளிபரப்பப்பட உள்ளது. ஒரு வகுப்பிற்கு தினசரி 2 காணொலிகள் வீதம் (ஒரு காணொலி 30 நிமிடங்கள்) 2 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஒளிபரப்பு செய்யப்படும்.
இணைப்பு பாட பயிற்சி கட்டக ஒளிபரப்பு மே 10 அன்று முடிந்த உடன் அதனை தொடர்ந்து பயிற்சி புத்தகத்திற்கான காணொலிகளும் மே 11 முதல் ஒளிபரப்பு செய்யப்படும். பயிற்சி புத்தகத்திற்கான கால அட்டவணை பின்னர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இணைப்பு பாட பயிற்சி கட்டகம் சார்பான காணொலிகள் ஒளிபரப்பப்படும்போது அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் உரிய வழிமுறைகளை பின்பற்றிட அறிவுரை வழங்கிட வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க
தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு:
‘அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கு இணைப்பு பாட பயிற்சி கட்டகங்கள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும். இணைப்பு பாட பயிற்சி கட்டகம் சார்பான ஒளிபரப்பு கால அட்டவணை அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைந்ததை உறுதி செய்ய வேண்டும். காணொலி ஒளிபரப்பின்போது அனைத்து மாணவர்களும் இணைப்பு பாட பயிற்சி கட்டகத்துடன் காணொலியை காண அறிவுறுத்த வேண்டும். கல்வி தொலைகாட்சியில் காணொலிகளை மாணவர்கள் பார்த்து பயன்பெறுவதை உறுதி செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்றும் பள்ளி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.