‘பெண்கள் மாதவிடாய்க்கு -முன்பும் பின்பும் 5 நாள்கள் கோவிட் தடுப்பூசி போடக் கூடாதா?’ – அரசு விளக்கம்..!!
பெண்கள் மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் 5 நாள்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது என்று சமூக வலைதளங்களில் செய்தி தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், அதில் உண்மை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியையும் படிங்க….
கரோனா பரவல் காரணமாக வங்கிகள் -இன்று முதல் அரை நாள் மட்டும் இயங்கும்..!! |
நாட்டில் காட்டுத்தீயாய் பரவிக்கொண்டிருக்கும் கொரோனாவால் ஆயிரக்கணக்கான மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் அரசு திணறிக்கொண்டிருக்கிறது. கொரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் மருந்துக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் மகாராஷ்டிராவை மையம் கொண்டிருந்த கொரோனா இப்போது வடமாநிலங்களை உக்கிரமாகத் தாக்க ஆரம்பித்துள்ளது. இன்னொரு பக்கம், கொரோனா தடுப்பூசிகள் குறித்த வதந்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. தற்போது புதிய ஒரு வதந்தி பரவி வருகிறது.
`பெண்கள் மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் 5 நாள்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கூடாது’ என்று சமூக வலைதளங்களில் ஃபார்வேர்டுகள் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த நாள்களில் பெண்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் அந்நாள்களில் கொரோனா தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கும்படி அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெண்கள் மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் 5 நாள்களுக்கு கொரோனா தடுப்பூசி போடக் கூடாது என்று வெளியாகும் செய்தி போலியானது. அது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம். மே 1-ம் தேதிக்குப் பிறகு 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். இதற்கான பதிவு வரும் 28-ம் தேதி தொடங்குகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி குறித்து புனேயைச் சேர்ந்த பிரபல மகப்பேறு மருத்துவர் கணேஷிடம் கேட்டதற்கு, “பெண்களுக்கு மாதவிடாய்க்கு முன்பும் பின்பும் 5 நாள்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று கூறப்படுவதில் உண்மையில்லை. அவர்கள் அந்நாள்களில் தாராளமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
நாட்டில் முதல்கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி, ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதில் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தும் பணி மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதில் 45 வயதைக் கடந்தவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க….
18-45 வயதுக்கு உட்பட்டவர்கள் நேரடியாக சென்றால்- தடுப்பூசி கிடைக்காது: ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்..!!
ஆனாலும் நாடு முழுவதும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மே 1-ம் தேதிக்குப் பிறகு தடுப்பூசியின் தேவை பன்மடங்கு அதிகரிக்கும். நிலைமையை மத்திய அரசு சமாளிக்குமா? என்று தெரியவில்லை. மத்திய அரசு, தனியார் மருத்துவமனைகள் உற்பத்தியாளர்களிடம் நேரடியாகத் தடுப்பூசியை வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.