ஸ்டெர்லைட் விவகாரம் – 28 ஆண்டுகள் என்ன நடந்தது..??
கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கடந்த 28 ஆண்டுகளில் என்னவெல்லாம் நடந்தது என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு..
சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டால், ஆலைக்கான உரிமம் ரத்து செய்யப்படும்’ என்ற நிபந்தனையோடு, 1996 அக்டோபர் 14-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமதியளித்தது.
முதன்முதலில் 1997 மே மாதத்தில், ஸ்டெர்லைட் அருகில் தோட்ட வேலையில் ஈடுபட்ட பெண்கள் மூவர், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து ஏற்பட்ட வாயுக் கசிவால் மயக்கம் ஏற்பட்டதாக புகாரளித்தனர்.
நவம்பர் 23, 1998ல் ‘நீரி’ என்று அழைக்கப்படும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியுள்ளதாகத் தொடுத்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தீர்ப்பளித்தது. ஆனால் ஒரு வார இடைவெளியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
1999ஆண்டு மார்ச் மாதத்தில் ஸ்டெர்லைட் ஆலை அருகிலிருந்த அனைத்திந்திய வானொலி நிலையத்தின் ஊழியர்கள் 11 பேர் விஷவாயுக் கசிவால் மயக்கம் ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே ஸ்டெர்லைட் தனது உற்பத்தியை ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்களில் இருந்து 70 ஆயிரம் டன்கள் வரை உயர்த்தியது.
1999 முதல் 2004 வரை, 5 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் நிறுவனம் மீது பல்வேறு புகார்களை தூத்துக்குடி மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட் ஆலை விதிகளை மீறி, ஆண்டுக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் டன் காப்பர் உற்பத்தி செய்வதாகவும், அனுமதி பெறாமல் பல்வேறு கட்டுமானங்களைக் கட்டியிருப்பதாகவும், 2004ஆம் ஆண்டு நவம்பர் 16ல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. ஆனாலும் 2008ல் ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை நாள் ஒன்றுக்கு 900 டன்னில் இருந்து ஆயிரத்து 200 டன்னாக உயர்த்தியது.
1996-ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையின் மீது பல்வேறு தரப்பினர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 2010 செப்டம்பர் 28ல், ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் மூன்று நாட்களில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் தடை செய்து, ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதியளித்தது.
இந்த செய்தியையும் படிங்க….
ஸ்டெர்லைட் ஆக்சிஜனை முழுவதும் மருத்துவப் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாது – தமிழக அரசு..!!
2013 மார்ச் 23ல், தூத்துக்குடி நகரம் முழுவதும் மக்கள் தலைவலி, கண் எரிச்சல், இருமல் உள்ளிட்ட உடல்நலக் குறைவுகளுக்கு உள்ளாகினர். இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவு தான் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வாரத்தில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. எனினும், விஷவாயுக் கசிவுக்கு ஸ்டெர்லைட் ஆலை தான் காரணம் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நிரூபிக்க முடியாததால், ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்குத் தடை அளிக்கப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து 100 நாள்கள் போராட்டம் நடத்திய மக்கள் 2018 மே 22ம் தேதியன்று பேரணியாக சென்று, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், காவல்துறைக்கும் கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து தமிழக அரசின் அரசாணையின்படி, மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் தமிழக அரசாணையை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, 2018 செப்டம்பர் ஒன்றாம் தேதி, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூன்று பேர் குழு ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது.
2018 டிசம்பரில், சில விதிமுறைகளுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 2019 பிப்ரவரியில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு தடை விதித்ததுடன், `வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை’ என்று அறிவித்தது.
உடனே உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வு அமைக்கப்பட்டது. 39 நாட்கள் விசாரணைக்கு பின் வழக்கு விசாரணை முடிந்தது. 2020 ஜனவரி 8ல் தேதி குறிப்பிடப்படாமல் இந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க, ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கலாம் என அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திக்காக 4 மாதங்கள் மட்டும் செயல்பட தமிழக அரசு தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.