கொரோனா வைரஸிடமிருந்து- எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது ..?? - Tamil Crowd (Health Care)

கொரோனா வைரஸிடமிருந்து- எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது ..??

 கொரோனா வைரஸிடமிருந்து- எப்படி நம்மை பாதுகாத்து கொள்வது ..??

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்திய மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்கள் போராடி வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு நாளும் கொரோனவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் மோசமாக அதிகரித்து வருகிறது. நாட்டின் சுகாதார அமைப்பு சிதைந்து கொண்டிருக்கும் இதுபோன்ற காலங்களில் நாம் தான், ஆபத்தான வைரஸிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ள சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கொரோனா எவ்வாறு பரவுகிறது?

SARs-COV-2 வைரஸ் தீவிரமாக பரவும் தொற்றுநோயாக இருப்பதால், நெருங்கிய தொடர்பு மூலம் மட்டுமல்ல, ஏரோசோல்கள் எனப்படும் பெரிய நீர்த்துளிகள் மூலமாகவும் பரவக்கூடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். யாரோ ஒருவர் தும்மும்போது, இருமும்போது, பேசும்போது அல்லது சிரிக்கும்போது வெளியாகும் நீர்குமிழ்கள் மூலம் கொரோனா காற்றில் பலமணிநேரம் இருக்கும் என்பதால், யாருக்கு வேண்டுமானாலும் பரவும் அபாயம் இருக்கிறது.

இந்த செய்தியையும் படிங்க…

மே 15 வரை ரத்து- சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!! 

தி லான்செட் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, COVID-19 முக்கியமாக காற்று வழியாக பரவுகிறது என்பதற்கு நிலையான மற்றும் வலுவான சான்றுகள் இருக்கின்றன. அதே ஆய்வில் COVID-19 இன் பரிமாற்ற விகிதங்கள் வெளிப்புறங்களை விட உட்புறத்தில் அதிகமாக இருந்தன. அதுவே உட்புறங்களில் காற்றோட்டம் அதிகமாக இருந்தால் வைரஸ் பரிமாற்றம் பெரிதும் குறைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (சி.டி.சி) படி, ‘கொரோனா பற்றிய ஆய்வக தரவுகளின் அடிப்படையிலும், இதேபோன்ற சுவாச நோய்களைப் பற்றி நமக்குத் ஏற்கனவே தெரிந்தவற்றின் அடிப்படையிலும், ஒரு நபரைத் தொடுவதன் மூலம் கோவிட் வைரஸை பெறலாம். வைரஸ் படிந்துள்ள மேற்பரப்பு அல்லது பொருளில் கை வைத்த பிறகு, ஒருவர் தங்களது வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடும் போது பரவலாம். ஆனால் இது வைரஸ் பரவுவதற்கான முக்கிய வழியாக கருதப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

கொரோனா மிகவும் தீவிரமான தொற்றுநோயாக இருந்தாலும், ஒருவர் விழிப்புடன் இருப்பதன் மூலமும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும் வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். அரசாங்கத்தாலும், சுகாதார அதிகாரிகளாலும் தொற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க தேவையான ஆதாரங்களை வழங்க மட்டுமே முடியும். ஆனால் அவை பரவாமல் தடுப்பது என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. பாதுகாப்பாக இருக்கவும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கவும் சில வழிகள் இருக்கின்றன. அவற்றை பற்றி விரிவாக காண்போம்.

முகக்கவசங்களை அணியுங்கள்:

கொரோனா நீர்குமிழ்கள் மூலம் பரவலாம் என்பதைக் கருத்தில் கொண்டு, நெரிசலான இடங்களில் அல்லது ஒருவருடன் பேசும்போது நன்கு பொருத்தப்பட்ட முகக்கவசங்களை அணிவது முக்கியம். கூடுதலாக, வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு வழியாக இரட்டை மறைப்பை கொண்ட முகக்கவசங்களை அணியலாம் என்றும் சி.டி.சி பரிந்துரைத்துள்ளது. இது வைரஸிலிருந்து கூடுதல் பாதுகாப்பை வழங்கக்கூடும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது தொற்று பரவும் அபாயங்களைக் குறைக்கும்.

சமூக விலகல்:

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) வெளியிட்ட அறிக்கையின்படி, ஒருவருக்கொருவர் 6 அடி இடைவெளி தூரத்தை பராமரிப்பது மிக முக்கியமானது. மேலும் சமூக விலகல் மூலம் ஆபத்தான வைரஸ் பரவாமல் தடுக்கலாம். இதனை கடைபிடிப்பதன் மூலம் அறிகுறி மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களிடமிருந்து நம்மைப் பாதுகாத்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், எந்த அறிகுறிகளும் இல்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளிடம் இருந்தும் நம்மை பாதுகாக்க முடியும். இதுதவிர, நீங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக உணர்ந்தால், ஒருவருக்கு மிக அருகில் செல்வதைத் தவிர்க்கவும்.

அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள்:

வைரஸ் எல்லா இடங்களிலும் பரவி வரும் சமயங்களில், நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். அடிக்கடி வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும். எனவே, அவசரநிலை தேவைகள் ஏற்பட்டால் மட்டுமே உங்கள் வீடுகளை விட்டு வெளியேறவும். வீட்டில் தங்கி, பாதுகாப்பாக இருங்கள், மற்றவர்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

உங்கள் கைகளை தவறாமல் கழுவி சுத்தம் செய்யுங்கள்

SARs-COV-2 வைரஸ் பொருள்கள் அல்லது மேற்பரப்புகளில் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். வைரஸ் சிறிது நேரம் நீடிக்கும் திறனைக் கொண்டிருக்கும் போது, நீங்கள் அசுத்தமான மேற்பரப்புகளுடன் தொடர்பு கொள்ள நேரிடலாம். அதனால் நீங்கள் பாதிக்கப்படலாம். எனவே, உங்கள் கைகளை தவறாமல் கழுவி சுத்தம் செய்வது முக்கியம். அடிக்கடி தொடும் மேற்பரப்புகள் மற்றும் பொருள்களை கிருமி நீக்கம் செய்து ஆரோக்கியமான சுகாதாரத்தை பராமரிக்க மறக்காதீர்கள்.

சரியான காற்றோட்ட வசதி அவசியம்

கொரோனா வெளிப்புறங்களை விட உட்புறத்தில் பரவக்கூடியது என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால்தான் ஒருவர் எப்போதும் நல்ல காற்றோட்டம் கொண்ட அறைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவது நல்லது.

கவனிக்க வேண்டிய பொதுவான அறிகுறிகள்:

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தவிர, மக்கள் கொரோனாவின் சில அறிகுறிகளையும் கவனிக்க வேண்டும். இது சிகிச்சையின் அடுத்த கட்டத்தை தேர்வு செய்ய உதவும். அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்ட வரம்புகளை கொண்டுள்ளன. மேலும் அறிகுறி பட்டியல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் வேளையில், மிகவும் பொதுவான அறிகுறிகள் அப்படியே இருக்கின்றன. எனவே, கொரோனாவின் மிக பொதுவான அறிகுறிகளை பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இதனால் ஆரம்ப கட்டத்தில் வைரஸைக் கண்டறிய முடியும். பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு,

* காய்ச்சல்

* வறட்டு இருமல்

* தொண்டை வலி

* ரன்னிங் நோஸ்

* மார்பு வலி மற்றும் மூச்சுத் திணறல்

* சோர்வு

* இரைப்பை குடல் தொற்று

* வாசனை மற்றும் சுவை உணர்வு இழப்பு

ஆரம்ப அறிகுறிகளின் போது தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம்:

மேற்கண்ட ஆரம்ப அறிகுறிகளை நீங்கள் பெற்றிருந்தால் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டிலோ அல்லது வெளியிலோ யாருடனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும். பரிசோதனை முடிவு நெகட்டிவாக வெளிவரும் வரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த செய்தியையும் படிங்க…

 கொரோனா: தமிழ்நாட்டில் அறிகுறி உள்ளவர்களை பரிசோதிக்க -புதிய வழிமுறை..!!

லேசான கொரோனா பாதிப்பு கொண்டவர்கள் வீட்டிலேயே எவ்வாறு சிகிச்சை பெறலாம்?

லேசான கொரோனா அறிகுறிகள் கொண்டவர்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவையில்லை. மேலும் அவர்களால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகளை நீங்கள் கவனித்தவுடன், நீங்கள் குணமடையும் வரையிலும், உங்கள் அறிகுறிகளை தொடர்ந்து கண்காணிக்கும் வரையிலும், குறைந்தபட்சம் ஒரு வாரமாவது உங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதிலும் நோய்த்தொற்றின் போது நீரேற்றமாக இருப்பது மிகவும் முக்கியமானது. அது தவிர, இதுபோன்ற காலங்களில் நீங்கள் நல்ல ஓய்வு எடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட வலி நிவாரணிகள் உங்கள் அறிகுறிகளை மேலும் குறைக்கும். இருப்பினும், உங்கள் மருத்துவர்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த மருந்துகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். முக்கியமாக பீதி அடையாமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்.

இந்த செய்தியையும் படிங்க…

வரும் சனி, ஞாயிறு- 2 நாட்களும் முழு ஊரடங்கா..?? 

ஒருவர் மருத்துவ உதவியை எப்போது பெற வேண்டும்?

வயதானவர்கள், முன்பே வேறு சில சுகாதார நிலைமைகளைக் கொண்டவர்கள் கடுமையான அல்லது சிக்கலான கொரோனா தொற்றால் பாதிப்படைய அதிக ஆபத்தில் உள்ளனர். இருப்பினும், கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளில் பல இளைஞர்களும் கடுமையான கொரோனா சிக்கல்களை சந்திக்கின்றனர். உங்கள் அறிகுறிகள் தொடர்ந்து மோசமடைந்தால், மருத்துவமனையை நாடுவது அவசியம். அதற்கு கீழ்காணும் அவசர அறிகுறிகளை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

* சுவாசிப்பதில் சிக்கல்

* தொடர்ந்து மார்பு வலி

* மன குழப்பம்

* நீல உதடுகள்

* விழித்திருக்க இயலாமை

Leave a Comment