இது உங்கள் இடம்: அடிப்படை நாகரிகம் இல்லையே..!!
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.மணி,
சென்னையிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
கொரோனா இரண்டாவது அலையால், உலக நாடுகளே விழி பிதுங்கி தவிக்கின்றன. மக்கள் தொகை நெருக்கம் அதிகமுடைய நம் நாடு, அதிக பாதிப்பை சந்தித்து வருகிறது.இந்தியாவுடன் மிக நெருக்கமாக பேச்சு நடத்தி, தட்டுப்பாடுள்ள தடுப்பூசி மருந்துக்கு தேவையான மூலப்பொருட்களை அனுப்பி வைத்து உதவி செய்யவுள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ஆண்டாண்டு காலமாக நமக்கு குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கூட, ‘மனிதகுலம் சந்தித்து வரும் சவாலான தொற்றை எதிர்கொள்ள, இந்திய மக்களுடன் துணை நிற்போம்’ எனத் தெரிவிக்கிறார்.’
திருடியோ, பிச்சை எடுத்தோ, கடன் வாங்கியோ, பணம் கொடுத்தோ, ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலியாகி விட்டனர் என்ற பேச்சே இருக்கக் கூடாது’ என, அரசுக்கு, டில்லி உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.ஆனால், ‘தமிழின’ போர்வையாளர்கள், ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு கூட எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த செய்தியையும் படிங்க…
உருமாறிய கொரோனா தொற்றின் அறிகுறிகள் என்ன தெரியுமா..??
அவர்களிடம் மன்றாடி, சம்மதம் வாங்கும் அவலநிலைக்கு, இந்நாடு சென்று விட்டது.அந்த அரசியல்வாதிகளுக்கு, மக்களை பற்றி கிஞ்சிற்றும் அக்கறை என்பதே கிடையாது.அமெரிக்காவும், இங்கிலாந்தும், பகை நாடான பாகிஸ்தானும் கூட, இந்த நெருக்கடியான காலகட்டத்தில், இந்தியாவுக்கு உதவுகிறோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், இங்குள்ள, தி.மு.க., – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், ‘பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று அறிக்கை விடுகின்றன.
மோடி ராஜினாமா செய்து விட்டால், நம் நாட்டில் இருந்து, கொரோனா தொற்று சொல்லாமல், கொள்ளாமல் விலகிச் சென்று விடுமா?நாடு இக்கட்டான நிலையில் இருக்கும்போது, அரசுடன் கைகோர்த்து நிற்க வேண்டும் என்ற அடிப்படைநாகரிகம் கூட, இந்த எதிர்க்கட்சியினருக்கு இல்லையே!