தமிழகத்தில் இன்று முதல்- 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு..!!
தமிழகத்தில், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, இன்று (மே 10) முதல், 24ம் தேதி வரை,மாநிலம் முழுதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இன்று காலை, 4:00 முதல், 24ம் தேதி காலை, 4:00 மணி வரை, இரு வாரங்களுக்கு, முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
- பால்,காய்கறி, மளிகை மற்றும் பத்திரிகை போன்ற அத்தியாவசிய சேவைகள், வழக்கம் போல உண்டு. .
- மளிகை, காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க, தடை விதிக்கப்படுகிறது.
- மாவட்டங்களுக்குள்ளும் இடையிலும் அரசு மற்றும் தனியார் நகர மற்றும் வெளியூர் பஸ்கள் இயங்காது. வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை.
- முழு ஊரடங்கு காலத்தில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.
- அனைத்து உணவகங்களிலும், ‘பார்சல்’ சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும்.
- டீக்கடைகள் பகல், 12:00 மணி வரை மட்டும் செயல்படலாம்; அங்கேயே அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.
- தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக, தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும், தங்கும் விடுதிகள் செயல்படலாம்.
- உள் அரங்கங்கள் மற்றும் திறந்தவெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
- ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதை சார்ந்த சடங்குகளில், 20 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி இல்லை.
- மாநிலம் முழுதும், அழகு நிலையங்கள், முடி திருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், அனைத்து பார்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் என, பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.
- சென்னை, கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும், சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட, தடை தொடர்கிறது.
- அதேபோல, மாவட்டங்களில் உள்ள, மொத்த வியாபார காய்கனி வளாகங்களில், சில்லரை வியாபார கடைகள் செயல்படாது.
- பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற, மருத்துவத் துறை சார்ந்த பணிகள்;
- சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விளை பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்து செல்லும் வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் ஆகியவை அனுமதிக்கப்படும்.
- ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.
- அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
- காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், பகல், 12:00 மணி வரை செயல்படலாம்.
- ரேஷன் கடைகள் காலை, 8:00 முதல் பகல், 12:00 மணி வரை செயல்படும்.
- தன்னார்வலர்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குவோர், அடையாள அட்டை மற்றும் ஆவணங்களுடன் சென்று வரலாம்.
- நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள் இயங்கும்.
- நடைபெற்று வரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம்.
- இவற்றில் பணியாற்றுவோர், நிறுவனம் ஏற்பாடு செய்யும் பஸ் அல்லது சொந்த வாகனங்களில், நிறுவனம் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்லலாம்.
- பள்ளி கல்லூரிகள், தனியார் பயிற்சி நிறுவனங்கள் இயங்க அனுமதி இல்லை.
- திருமண நிகழ்வுகளில், 50 பேருக்கு மிகாமல், இறப்பு நிகழ்வில், 20 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம்.
- தொலைத்தொடர்பு மற்றும் அதை சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.
- மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு, தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ளலாம்.
- அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக, மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
- ரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.
- பெட்ரோல் மற்றும் டீசல் பங்க்குகள் தொடர்ந்து செயல்படும்.
- வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள், அதிக பட்சம், 50 சதவீத பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும்.
- அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில், சமூக இடைவெளி, முக கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
- தவறும்பட்சத்தில் அக்கடைகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி, வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
- இளைஞர்கள் ஊர் சுற்றுவதை நிறுத்த வேண்டும்.
- வெளியில் செல்வோர், கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்லவும்.
- கைகளை அடிக்கடி கிருமி நாசினி அல்லது சோப்பால் சுத்தம் செய்யவும்.
- சமூக இடைவெளியை கண்டிப்புடன் கடைப்பிடிக்கவும்.
- முழு ஊரடங்கை முழுமையாக பயன்படுத்திக் கொண்டால், நோய் பரவலைக் குறைக்கலாம்.
- எனவே, பொது மக்கள், அரசு உத்தரவை முழுமையாக பின்பற்றி, நோயை கட்டுப்படுத்த ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.