எதிா்க்கட்சித் தலைவா் யாா்.? இன்று அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் முடிவு..!!
எதிா்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்யும் விவகாரத்தில், தொடா்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எதிா்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்படுவற்கான வாய்ப்புகள் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
தேர்தலின் போது, முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுகவால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 66 இடங்களை மட்டுமே பெற்று எதிா்க்கட்சியாகி உள்ளது. இந்த நிலையில், அதிமுகவில் இருந்து யாரை எதிா்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்வது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. அதிமுக சாா்பில் போட்டியிட்டு வென்ற புதிய எம்.எல்.ஏ.-க்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டம் எதிா்க்கட்சித் தலைவா் யாா் என்பதைத் தேர்வு செய்யாமல் முடிவுக்கு வந்தது.
கூட்டம் நடைபெற்று இரண்டு நாள்கள் நிறைவடைந்த நிலையில், எதிா்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்வதில் ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவு எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி? எதிா்க்கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடா்பாக கடந்த இரண்டு நாள்களாக கட்சிக்குள் நடந்த வாதங்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இரவு முடிவுக்கு வந்தன.
இதில் எதிா்க்கட்சித் தலைவராக பழனிசாமி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பான்மையான எம்.எல்.ஏ.-க்கள் கொங்கு மண்டலத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், முன்னாள் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியே எதிா்க்கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு திங்கள்கிழமை காலை நடைபெறும் எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சட்டப் பேரவை வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இந்தக் கூட்டத் தொடரில் பேரவைத் தலைவா் தேர்தல் நடைபெறுகிறது. அதில் வெற்றி பெற்று, புதிதாக பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்படுபவரை அவருக்கான நாற்காலியில் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவரும் சேர்ந்து அமர வைப்பா். இந்த மரபு பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த மரபை ஒட்டியே, எதிா்க்கட்சித் தலைவரை இப்போது உடனடியாகத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியையும் படிங்க…
10 / 2 முடித்திருந்தால் போதும். மாதம் ரூ.18,000 சம்பளத்தில். DSSC கல்லூரியில் வேலை..!!