பள்ளிக்கல்வித்துறை ஆணையர் பதவிக்கு எதிரான வழக்கு- தள்ளுபடி..!!
அரியலூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கருணாகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பள்ளிக்கல்வி நிர்வாகத்தில் நீண்ட அனுபவம் பெற்ற முதன்மை கல்வி அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனராகவும், பின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
ALSO READ…
கரோனாவால் உயிரிழந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிவாரணம்: ESIC தகவல்..!!
கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிக்கல்வி ஆணையர் என்ற பதவி உருவாக்கப்பட்டு, ஐ.ஏ.எஸ். அதிகாரியை அப்பதவியில் நியமித்து, பள்ளி நிர்வாகத்தை கண்காணிக்கப்பட்டது எனவும், ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் உள்ள நிலையில், எந்த வித சிறப்பு தகுதியும், அனுபவமும் இல்லாத ஆணையர் பதவி என்பது தேவையில்லாதது எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் அதிகாரங்களை, ஆணையருக்கு வழங்கி கடந்த மே 14- ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது தவறு எனவும், ஆணையருக்கு பதிலாக கல்வித்துறையில் அனுபவம் பெற்றவர்களை இயக்குனராக நியமிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, 2014- ஆம் ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன் பள்ளிக்கல்வித்துறை ஆணையராக மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பதவி வகித்துள்ளதாக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிட்டார்.
ALSO READ…
PAN – Aadhaar Link: இணைக்கத் தவறினால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படும்..??
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அதிகாரிகள் நியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகார வரம்புக்குட்பட்டது எனவும், நியமனத்தில் சட்டவிரோதம் இருந்தால் மட்டுமே நீதிமன்றங்கள் தலையிட முடியும் எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.