6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடம் கொண்டு வரப்படும் -அரசு பள்ளிகளில் கணினி பாடம் சார்ந்த கோரிக்கை.
அரசு பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் உலகத்தரத்திற்கு நிகரான ஒரு கல்வியை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி அவர்கள் அவரது ஆட்சியில், அரசு பள்ளி மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு, தொலைநோக்கு பார்வையில், கணினி அறிவியல் பாடத்தை தனி பாடமாக 6 முதல் 10ம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தியதோடு மட்டுமின்றி, பள்ளிகளில் கணினி பாடத்தை அமல்படுத்த வேண்டும் உத்தரவிட்டதோடு மட்டுமின்றி, 50 லட்சம் அச்சிடப்பட்ட பாடபுத்தகங்களையும் பள்ளிகளுக்கு வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பினார்.
அன்றைய தொடங்கிய போராட்டம், அரசியல் தலைவர்கள் சந்திப்பது, அமைச்சர்களிடம் கால்கடுக்க நின்று கோரிக்கை மனு வழங்குவது, ஊடகங்கள், நாளிதழ்கள் மூலமாக அவர்களது கோரிக்கை மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வது, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்புவது இவர்களது பணி நகர்ந்து கொண்டே இருந்தது.
இவர்களுடைய தொடர் முயற்சியினால், தமிழகத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி அறிவியல் காலிபணியிடங்களில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, ஏழை வீட்டு பிள்ளைகள் கணினி கல்வியை படித்து வருகின்றனர். இவர்களின் உந்து சக்தியினால்தான், கணினி அறிவியல் ஆய்வகத்தின் மோசமான நிலையை வெளிகொணர்ந்து, உயர்தர கணினி ஆய்வகங்கள் பள்ளிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். கணினி சார்ந்த கல்வியில் இவர்களுடைய பங்கு முக்கியமானது. இவ்வாறு தங்களது 10 ஆண்டு வாழ்க்கையை இப்படியும் நகர்த்தி வந்துள்ளனர் .
இருந்தபோதும், தற்போது ஆட்சியாளர்கள் விட, திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு பள்ளிகளில் கணினி பாடம் உறுதியாகவும், முழுமையாகவும் கொண்டு வரப்படும், ஏனென்றால், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திட்டம் என்பதால், திமுக இந்த கோரிக்கையை செயல்படுத்தும் என்ற நம்பிக்கை அவர்கள் மனதில் இருந்துகொண்டே இருந்தது.
இதுதவிர, அவர்களது கோரிக்கை திமுக தேர்தல் அறிக்கையில் நிச்சயம் இடம்பெறும் என மிகுந்த ஆர்வத்துடனும், களையிழந்த சந்தோஷத்துடன் கனவு கண்டு வந்தனர்.
திமுக தேர்தல் அறிக்கை நேற்று வெளியானதும், பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் தங்களது கோரிக்கை இடம்பெற்றுள்ளதா என ஒவ்வொரு பக்கத்தையும் பரபரப்புடனும், ஆர்வமுடனும் தேடி தேடி படிக்க ஆரம்பித்தனர். அவர்களின் தேடல் இறுதிபக்கத்தையும் விட்டுவைக்கவில்லை.
ஏன் கணினி கல்வி வேண்டும்?
டிஜிட்டல் இந்தியா என்று நாம் பேசி கொண்டிருக்கும் இந்த வேளையில், இதே டிஜிட்டல் கல்வி அரசு பள்ளி மாணவர்களுக்கு எட்டா கனியாகவே செயற்கையாகவே புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இங்கேயும் பணம் இருக்கிறவன், இல்லாதவன் என்ற பாகுபாடுதான், தனியார் பள்ளியில் கணினி கல்வி, அரசு பள்ளி வெறும் கல்வி.
தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதலே அப்பள்ளி குழந்தைகளை கணினியை கல்வியை கற்பித்து வருகின்றனர். அப்பள்ளி மாணவர்கள் கணினி பயன்பாடை எளிதாக கையாள்கிறான்.
இங்கு நம் அரசு பள்ளி மாணவன் 11ம் வகுப்பில்தான் கணினியை தொட்டு பார்க்க வேண்டியுள்ளது. அதுவும் சில குறிப்பிட்ட பாட பிரிவு மாணவர்கள் மட்டுமே. அதன்பின் அவன் கணினியின் அடிப்படையை படிக்க ஆரம்பிக்கிறான், ஆய்வகத்தில் கணினியை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தொட்டு ரசிக்கதான் முடிகிறது.
பின் அரசு பள்ளி மாணவர்கள் எப்படி உயர்கல்விக்கு சென்று ஜொலிக்கமுடியும் என்று நம்புகிறீர்கள். கணினி இணையம் ஜெட் வேகத்திற்கு சென்றுகொண்டிருக்கும்போது, நம் அரசு பள்ளி விமானம் வேகத்திற்காவது செல்ல வேண்டாமா, ஆனால், நம் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து வேகத்திற்கு வந்துள்ளனர் ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?
கல்விக்காக கிட்டதட்ட 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கும் தமிழக அரசு கணினி கல்வியை மட்டும் முழுமையாக செயல்படுத்த மறுப்பது ஏன். தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை அடிபட்டுவிடுமோ என்றா?. ஆளுங்கட்சியோ, எதிர்கட்சியோ கல்வியில் கண்முன்னே இருக்கும் பிரச்னையை சரி செய்யாமல், பிற திட்டங்கள் நல்ல திட்டங்கள் கொண்டு வந்தாலும், அதுவும் மாணவர்களுக்கு உதவாது.
கணினி கல்வியை கொண்டுவந்தால், நம் வீட்டு பிள்ளைகள்தான் படித்து பயன் பெறுவார்கள், கணினி கற்று கொள்வார்கள், நாமும் எது தேவையோ அதை சிந்திக்க மறுப்பதும் மறப்பதும் மறதியாகவே உள்ளது .
கணினி கல்வி அவர்களுக்கான கோரிக்கையல்ல, நமக்கான கோரிக்கை… இந்த கோரிக்கையை பரிசிலீக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.