24ம் தேதி வரை- சார்பதிவாளர், ஆர்டிஓ(RDO) அலுவலகங்கள் இயங்காது: அரசு அறிவிப்பு..!!
ஊரடங்கு முடியும் நாளான 24ம் தேதி வரை சார்பதிவாளர், ஆர்டிஓ(RDO) அலுவலகங்கள் இயங்காது: அரசு அறிவிப்பு..!!
முழு முடக்கம் காரணமாக சார்பதிவாளர் அலுவலகங்கள் இன்று முதல் வரும் 24ம் தேதி வரை செயல்படாது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. அதபோல ஆர்டிஓ அலுவலகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 24ம் தேதி வரை முழு முடக்கம் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில், அத்தியவாசிய பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலகங்கள் மட்டுமே செயல்படும் என்று அறிவித்து இருந்தது.
அதன்படி தலைமை செயலகம், சுகாதாரத்துறை, வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மின்சாரம், உள்ளாட்சி அமைப்புகள், வனத்துறை, கருவூலத்துறை, சமூக நல மற்றும் பெண்கள் உரிமை அலுவலகம் தவிர மற்ற அலுவலகங்கள் மூடப்படும் என்று நேற்று முன்தினம் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனால், மாநிலம் முழுவதும் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் இரண்டு வார காலத்துக்கு இயங்காது என்று பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது. இது குறித்து பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இன்று முதல் வரும் 24ம் தேதி வரை சார் பதிவாளர் அலுவகங்கள் அனைத்தும் செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதே போன்று முழு முடக்கம் காரணமாக வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் இன்று முதல் இரண்டு வாரத்துக்கு இயங்காது என்று கூறப்பட்டுள்ளது.