(+2) மாணவர்கள்- பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு:
பொதுத்தேர்வு நடத்தும் முன்பு, மாவட்ட அளவில் வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தினால், மாணவர்கள் கற்றல் நிலை தெரியவரும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, வழக்கமாக அரையாண்டு தேர்வுக்கு முழு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும்.இதற்கு பிறகு, மூன்று திருப்புதல் தேர்வுகளை மாணவர்கள் சந்தித்த பிறகு, பொதுத்தேர்வு எழுதுவர்.
ஆனால், கொரோனா தொற்று பரவுவதால், பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த ஜன.,ல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன.ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் முழுமையாக பங்கேற்காததால், பள்ளி திறந்த பிறகு தான், பாடங்கள் கையாளப்பட்டன. தற்போது சிலபஸ் முடிக்கப்பட்ட நிலையில், செய்முறை பொதுத்தேர்வுக்கு, அறிவிப்பு வெளியிடப்பட்டது.தேர்தலுக்காக பள்ளிகள் ஒருவாரம் மூடப்பட்டிருக்கும்.
அதன் பின், மாவட்ட அளவில் ஆசிரியர் குழுக்களை கொண்டு வினாத்தாள் தயாரித்து, மாடல் பொதுத்தேர்வு நடத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.பெற்றோர் சிலர் கூறுகையில், ‘ பிளஸ் 2 மதிப்பெண்கள் கொண்டு தான், உயர்கல்வியில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்ய முடியும். மே மாதம் தேர்வு நடத்த, அட்டவணை வெளியிடப்பட்டது.
ஏப்.,க்குள் அந்தந்த பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தினால், மாணவர்களின் கற்றல் நிலை அறிவது கடினம்.மாவட்ட அளவில் பொது வினாத்தாள் தயாரித்து, மாடல் தேர்வு நடத்தலாம். திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், இந்நடைமுறை பின்பற்றப்படுகிறது. தேர்தலுக்கு பிறகு, கோவையிலும் மாடல் தேர்வு நடத்தினால் தான், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன், தேர்வுக்கு தயாராவர்’ என்றனர்.