வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தம் இன்று தொடக்கம்: தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் பங்கேற்பு
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் அறிவிப்பைக் கண்டித்து, வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்று தொடங்குகின்றனர். தமிழகத்தில் 60 ஆயிரம் வங்கி ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.
2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய பட்ஜெட்டின்போது நிதியமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் அகில இந்திய அளவில் இன்றும் (15-ம் தேதி), நாளையும் (16-ம் தேதி) 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதன்படி, நாடு முழுவதும் நடைபெறும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் 9 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். நாடு முழுவதும் 88 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படுகின்றன. தமிழகத்தில் 14 ஆயிரம் வங்கிக் கிளைகள் மூடப்படும்.
இந்த வேலைநிறுத்தம் காரணமாக, ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பரிவர்த்தனை வர்த்தகம் பாதிக்கப்படும். அதே சமயம், ஏடிஎம் மையங்கள் முழு அளவில் செயல்படுவதற்காக, தேவையான அளவு பணம் நிரப்பப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனியார் வங்கிகள் வழக்கம் போல் இன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.