முதுநிலை ஆசிரியர் தேர்வு பட்டியலை- மாற்றி வெளியிட கோரிக்கை..!!
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர் நியமனத்தில், தகுதி அடிப்படையில் பொதுப்பிரிவில் தேர்ச்சி பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களை, பொதுப்பிரிவில் சேர்க்காமல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித் திருக்கிறது.
இந்த செய்தியையும் படிங்க…
தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க திட்டம்..!பா.மா.க தலைவரின் யோசனை…!
சமூகநீதிக்கு எதிரான இந்த செயலால் வேதியியல் பாட ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது. இந்த அநீதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்பிசி மாணவர்களை, பொதுப் பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவுப் பணியிடங்களில் தர வரிசையில் அடுத்த நிலையிலுள்ள எம்பிசி மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது.
ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த சஞ்சய்கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து நிராகரித் திருக்கிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் படி வேதியியல் பாட முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வுப்பட்டியல் திருத்தி வெளியிடப்பட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறான முடிவால் பாதிக்கப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பணி வழங்கப்பட வேண்டும்.
இந்த சர்ச்சை இத்துடன் ஓய்ந்து விடாது. வேதியியல் பாடத்தில் மட்டுமின்றி தமிழ் பாடத்தில் 28 பேர், பொருளியலில் 12 பேர், வரலாற்று பாடத்தில் 6 பேர், புவியியல், அரசியல் அறிவியல், உயிரி வேதியியல் பாடங்களில் தலா ஒருவர் என மொத்தம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 83 பேரும், இந்தப் பாடங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த 16 பேரும் ஆசிரியர்களாகும் வாய்ப்பை இழந்துள்ளனர்.
அந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியலையும் திருத்தியமைத்து, பாதிக்கப்பட்ட எம்.பி.சி மற்றும் பட்டியலின மாணவர்களுக்கு முதுநிலை ஆசிரியர் பணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த காலங்களில் பின்னடைவுப் பணியிடங்கள் நிரப்பப்பட்ட போதும் இதேபோன்ற சமூக அநீதி நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்பதால், அது குறித்தும் ஆய்வு செய்யப்பட வேண்டும்; அப்போதும் எம்.பி.சி வகுப்பினர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு சமூகநீதி வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.