முதல்வர் ஸ்டாலின் : 5 புதிய அறிவிப்புகள் வெளியீடு & சட்டசபையில் நடந்த விவாதம்..!!
‘கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தொடர் சிகிச்சை பெற, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கப்படும். நடப்பு நிதியாண்டில், 100 கோடி ரூபாய் செலவில், 100 கோவில்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்’ என்பது உட்பட, ஐந்து புதிய அறிவிப்புகளை, நேற்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த செய்தியையும் படிங்க…
ஆளுநர் உரையை எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்: திமுக அடக்க முடியாத யானை-மு.க.ஸ்டாலின் பதில்..!!
சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அவர் பேசியபோது வெளியிட்ட அறிவிப்புகள்:கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ள, சில முக்கிய கருத்துகளுக்கு, செயல்வடிவம் கொடுக்கும் வகையில், சில அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
👉👉1)சிறப்பு சிகிச்சை மையங்கள்:
கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளபோதும், அந்த தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு, சில பிரச்னைகள் வருவதாக, பலரும் தெரிவித்துள்ளனர். அவர்கள் தொடர் சிகிச்சை பெற, அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளிலும், சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கப்படும். தேவையான உயர் சிகிச்சை மருத்துவர்களோடு, இந்த மையங்கள் செயல்படும்.
👉👉2)வேலைவாய்ப்பு:
வளர்ச்சியில் பின் தங்கியுள்ள, வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய, தொழிற்சாலைகள் அமைப்போம் என்று அறிவித்திருக்கிறோம்.
- முதற்கட்டமாக, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், 12 ஆயிரம் பேருக்கும்;
- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில், 10 ஆயிரம் பேருக்கும், வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய, பெரும் தொழிற்சாலைகள் அமைய உள்ளன .
👉👉3)வழக்குகள் வாபஸ்:
- கடந்த ஆட்சியில், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள்;
- மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள்,
- மீத்தேன் – நியூட்ரினோ – கூடங்குளம் அணு உலை – சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக, அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும்.
👉👉4)சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும்:
- கருணாநிதி கட்டிய 240 சமத்துவபுரங்கள், சரியாக பராமரிக்கப்படாத அவல நிலையில் உள்ளன;
- அவை உடனடியாக சீரமைக்கப்படும்;
- புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும்.
👉👉5)கோவில்கள் புனரமைப்பு:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கோவில்கள் புனரமைப்புக்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற வாக்குறுதி இருந்தது. அதற்கு முதற்கட்டமாக, இந்த நிதியாண்டில், 100 கோடி ரூபாய் செலவில், கோவில்களை தொன்மை மாறாமல் புதுப்பிக்க, திருக்குளங்களை சீரமைக்க, திருத்தேர்களை புதுப்பித்து திருவிழாக்கள் நடத்த தேவையான பணிகள், 100 கோவில்களில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
‘அனைத்து வழக்குகளும் ஆய்வு’ :
கடந்த ஆட்சியில், அற வழியில் போராடியதற்காக போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
*****தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன்*****:
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு போராட்டங்கள் நடத்தினோம். இதற்காக, 10 ஆண்டுகளாக, என் மீதும், வைகோ, திருமாவளவன் உட்பட பல்வேறு தலைவர்கள் மீதும், ஏராளமான வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும்.
முதல்வர்:
இது தொடர்பாக ஆய்வு செய்து, வன்முறை வழக்குகள் தவிர்த்து, மற்ற வழக்குகளை முடிக்க, நடவடிக்கை எடுக்கப்படும்.
*****மா.கம்யூ., நாகை மாலி*****:
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய சில மாணவர்கள் மீது, வழக்குகள் உள்ளன.அவற்றை திரும்பப் பெற வேண்டும்.
முதல்வர்:
இது சட்டத்துறை ஆய்வில் உள்ளது. விரிவான அறிக்கை வந்ததும், நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும்.அறவழியில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குள் முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுவர். அனைத்து வழக்குகள் மீதும், ஆய்வுப்பணி நடந்து வருகிறது.இவ்வாறு விவாதம் நடந்தது.