மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்.
தேர்தல் வாக்குப்பதிவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் போது முறைகேடுகள் நடைபெறுகிறது என்றும் வழிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை போன்ற குறைகளை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கானது தலைமை நீதிபதி சஞ்சய் பேனர்ஜி, செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, வாக்குப்பதிவில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தேர்தல் ஆணையம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் மின்னணு இயந்திரம் மூலம் பல முறை வாக்குப்பத்திவு நடந்துள்ளது என்றும் வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வாய்பில்லை என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
உச்சநீதிமன்றம் இது தொடர்பாக தீர்ப்பளித்துள்ளதால் இதுப்பற்றி உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் நீதிபதிக்கள் உத்தரவிட்டனர்.