புதிய பிரிட்டன் வகை கொரோனா-அதிகமான இளைஞர்களைப் பாதிக்கிறது:
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடியிடம் இளையவர்களுக்கும் தடுப்பூசி போட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
“மரபணு வரிசைப்படுத்துதலுக்காக பஞ்சாப் அனுப்பிய சமீபத்திய 401 மாதிரிகளில் 81% புதிய பிரிட்டன் வகை கொரோனா மாறுபாட்டைக் காட்டுவதால், அதிகமான இளைஞர்களைப் பாதிக்கிறது. பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் இது குறித்து கவலை தெரிவித்துள்ளார். 60 வயதை விட குறைந்தவர்களுக்கும் தடுப்பூசி போடா பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.” என பஞ்சாப் முதல்வரின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரால் தெரிவித்துள்ளார்.
அமரீந்தர் சிங் தடுப்பூசி போடுமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்ததோடு, மக்களில் பெரும் பகுதியினருக்கு மத்திய அரசு அவசரமாக தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பஞ்சாபில் நேற்று 2,319 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,15,409 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய 58 இறப்புகளுடன் மொத்த இறப்பு எண்ணிக்கை 6,382 ஆக உயர்ந்துள்ளது.
லூதியானாவில் அதிகபட்சமாக 341 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், ஜலந்தர் 309, மொஹாலி 295, ஹோஷியார்பூர் 230, அமிர்தசரஸ் 210 எனும் அளவில் பபுதிய கொரோனா தொற்றுகளை பதிவு செய்துள்ளன.
இதற்கிடையே மாநிலத்தின் பல நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் நிர்வாகம் மார்ச் 31 வரை பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடியுள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு ஹோலி கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளன.