"பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்"- ஹைகோர்ட் ..!! - Tamil Crowd (Health Care)

“பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்”- ஹைகோர்ட் ..!!

 “பிச்சை எடுத்தோ, திருடியோ, கடனுக்கோ ஆக்சிஜன் வாங்குங்கள்”- ஹைகோர்ட் ..!!

“பிச்சை எடுங்கள், திருடுங்கள், கடன் வாங்குங்கள், பணம் கொடுத்து வாங்குங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உயிருக்கு போராடும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்” என மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் அதே சூழலில், தலைநகர் டெல்லியில் போதுமான மருத்துவ வசதிகள் இல்லாமல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. டெல்லியில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் போதுமான ஆக்சிஜன் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது.

இந்த செய்தியையும் படிங்க….

உலக அளவில் பாதிப்பில் முதலிடம் தொட்ட இந்தியா.! – அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது.! 

இதுதொடர்பாக, வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தது.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தங்களது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செலுத்துவதற்கு போதிய ஆக்சிஜன் இல்லாத சூழல் இருப்பதாகவும், இந்த நிலை தொடர்ந்தால் பெரும் ஆபத்து ஏற்படும் என்பதால் தங்களுக்கான ஆக்சிஜனை உடனடியாக வழங்க அரசுக்கு உத்தரவிடுமாறும் மனுத் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை நேற்று விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தது.

“நோயாளிகளுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை செய்து தருவது என்பது அரசின் அடிப்படைக் கடமை. அதனை மத்திய அரசு சரிவர செய்ய வேண்டும். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்குவதற்கு திருடுங்கள், பிச்சை எடுங்கள், கடன் வாங்குங்கள் அல்லது பணம் கொடுத்து எதையாவது செய்யுங்கள். ஆனால், ஆக்சிஜன் சப்ளையை செய்யுங்கள்” என மத்திய அரசை காட்டமாக டெல்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

வழக்கின் விசாரணையை ஒருநாள் ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசின் வழக்கறிஞர் கேட்டபோது, இன்று இரவு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழப்பு ஏற்பட்டால் அதற்கு நீங்கள் பொறுப்பு ஏற்பீர்களா எனக் கேள்வி எழுப்பியதோடு மட்டுமல்லாமல், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ஆக்சிஜன்களை மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டியதுதானே என கேள்விகளை எழுப்பினர்.

தொழிற்சாலைகள் தயாரிக்கும் ஆக்சிஜன் அவர்களுக்கு ஆனது. அதுமட்டுமில்லாமல், பெட்ரோலியம் உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கான ஆக்சிஜன் தேவை என்பது கட்டுப்பாடில்லாமல் இருக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மீண்டும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ‘மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் சூழலில் நீங்கள் தொழிற்சாலைகள் குறித்து கவலைப்படுகிறீர்கள், டெல்லியில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லாமல் இருக்கக்கூடிய சூழல் மிகவும் அபாயகரமானது. நாங்கள் வெறும் டெல்லியை குறித்து மட்டும் பேசவில்லை ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாமல் பார்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. இதற்காக தொழிற்சாலைகளுக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன்களை உடனடியாக மருத்துவ சேவைகளுக்கு திருப்பி விடுங்கள்” என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

“முந்தைய தினமே இந்த வழக்கை விசாரித்தபோது ஆக்சிஜன் சப்ளையை உறுதிப்படுத்துங்கள் என கூறியிருந்தோம். ஒருநாள் முடிந்துவிட்டது. என்னதான் செய்து இருக்கிறீர்கள்?” என மீண்டும் அழுத்தமான கேள்வி எழுப்பிய டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், “டாடா நிறுவனம் தனது சார்பில் ஆக்சிஜனை உருவாக்கும்போது மற்றவர்கள் ஏன் அதனை செய்யக்கூடாது? இந்த இக்கட்டான சூழலில் அனைவரும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும்

“தொழிற்சாலைகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் வானம் ஒன்றும் இடிந்து விழுந்து விடப்போவதில்லை. எனவே மருத்துவ சேவைக்கான ஆக்சிஜன் தேவையை உடனடியாக நிறைவு செய்யுங்கள்” என நீதிபதிகள் கூறினர்.

இந்த செய்தியையும் படிங்க….

இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கரோனாவை -கோவாக்சின் திறம்பட எதிர்க்கும்: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்..!! 

ஏற்கெனவே தலைநகர் டெல்லிக்கு 420 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கைகளை உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதை மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுட்டிக்காட்டியபோது, “மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வருவதை உறுதிப்படுத்துங்கள். தேவைப்பட்டால் வான்வழியாக ஆக்சிஜனை எடுத்துச் செல்லவும் நடவடிக்கை எடுங்கள்” என கூறினர்.

இதையடுத்து தொடர்ந்து வழக்கு விசாரிக்கப்படும் என கூறி வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Leave a Comment