‘பான் – ஆதார்’ இணைக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்க முடிவு-மத்திய அரசு.
‘பான் கார்டு’ வைத்திருப்போர், அதை, நாளை மறுநாளுக்குள், ‘ஆதார்’ எண்ணுடன் இணைக்காவிட்டால், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பான் கார்டு:
பான் கார்டு எனப்படும், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை வைத்திருப்போர், தங்கள் ஆதார் எண்ணுடன், அதை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்து இருந்தது.இதற்கான காலக்கெடு, கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அந்த காலவரையறை, நாளை மறுநாள் வரை நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், ‘காலக்கெடுவுக்கு முன், ஆதார் எண்ணுடன், பான் எண்ணை இணைக்காவிட்டால், வருமான வரி சட்டத்தின் கீழ், 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது:
மேலும், அந்த பான் கார்டு ரத்து செய்யப்பட்டு விடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பான் கார்டு ரத்து செய்யப்பட்டால், பணப் பரிவர்த்தனைகள் செய்வது, புதிய வங்கிக் கணக்கு துவங்குவது போன்ற வங்கி சேவைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ‘இந்த காலக்கெடு, மேலும் நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை’ என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.