பள்ளி வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்க,
பள்ளிக்கல்வி துறை உத்தரவு..!!
அரசு பள்ளி மாணவர் ஒருவர், ஆசிரியர்களை கத்தியை காட்டி மிரட்டிய சம்பவத்தை தொடர்ந்து, பள்ளி வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்க, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறையின் கீழ், பல கோடி ரூபாய் செலவில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. பள்ளிக்கே தொடர்பில்லாத
‘இல்லம் தேடி கல்வி’ திட்டம்;
பள்ளி நிர்வாக பணியை, ‘ஆன்லைனில்’ மேற்கொள்ளும் தகவல் தொழில்நுட்ப திட்டம்;
பள்ளிக்கு வெளியே வழிகாட்டும், ‘நான் முதல்வன்’
என பல திட்டங்கள் உள்ளன.
ஆனால், மாணவர்களின் கற்பித்தல் சார்ந்தும், ஒழுக்க நெறியை பேணும் வகையிலும், ஆரோக்கியமான திட்டங்கள் வரவில்லை என, குற்றச்சாட்டுகள் உள்ளன. குறிப்பாக, மாணவர்களை ஒழுங்குபடுத்த, நல்வழி காட்ட, உளவியல் ஆலோசகர்கள் நியமிக்க கூட, நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது.
இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் சிலர், பஸ் படிக்கட்டில் ஆட்டம் போடுவது, உள்ளூர் ரயில்களில் சாகசம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். சில மாணவியர் புகை பிடிக்கும் சம்பவங்களும்நடக்கின்றன.இதன் உச்சகட்டமாக, தேனி மாவட்டம், தேவதானப்பட்டி, அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் படிக்கும், பிளஸ் 1 மாணவர் ஒருவர், ஆசிரியரிடம் கத்தியை காட்டி ரகளை செய்தார்.
தட்டிக் கேட்ட ஆசிரியர்களிடம், ‘ஏறினா ரயிலு, இறங்குனா ஜெயிலு, போட்டா பெயிலு’ என்று திமிராக பேசியதும், சமூக வலைதளத்தில் வெளியானது.இதையடுத்து, பணி பாதுகாப்பு வேண்டும் என, தேனி முதன்மை கல்வி அலுவலரிடம், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மனு அளித்தனர். தற்போது, அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை கண்காணித்து, அநாகரிக செயலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கண்காணிப்பாளர்களை நியமிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வி துறை நாட்டு நலப்பணி திட்ட இணை இயக்குனர் அமுதவல்லி, பள்ளிகளுக்கு ஏற்கனவே அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பஸ்கள் மற்றும் பிற இடங்களில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை கண்காணித்து, உரிய உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். ‘அவர்களின் பெற்றோரை அழைத்து, எச்சரிக்க வேண்டும்’ என கூறியுள்ளார்