பருவ தேர்வுகளை மார்ச் 31க்குள் முடிக்கும்படி, பள்ளிகளுக்கு உத்தரவு
கொரோனா தொற்றால், இந்த கல்வி ஆண்டு முழுதும் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன.
கொரோனா தாக்கம் குறைந்ததால், ஜன., 19 முதல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கும்; பிப்., 8 முதல், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1க்கும் நேரடி வகுப்புகள் துவங்கின.இந்நிலையில், பிளஸ் 2வுக்கு மட்டும், மே 3ல் பொதுத் தேர்வு துவங்கும் என, அறிவிக்கப்பட்டது. ஒன்பது முதல், பிளஸ் 1 வரை, பொதுத் தேர்வு மற்றும் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அனைவருக்கும், ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டது.
தேர்வு ரத்தானாலும், பாடங்களை நடத்தி முடிப்பதற்காக, வாரத்தின் ஆறு நாட்களும் பள்ளிகள் இயங்குகின்றன. ஒன்று முதல், எட்டு வரையிலான வகுப்புகளுக்கு மட்டும், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் ஏப்., 6ல் நடக்க உள்ளதால், அனைத்து பள்ளி வளாகங்களும் ஓட்டுச் சாவடி பணிக்கு, தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
இதன் காரணமாக, அனைத்து பள்ளிகளிலும், மார்ச் 31க்கு பின், கோடை விடுமுறையை அறிவிக்க, பள்ளி கல்வி துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, வரும் 22ம் தேதி முதல், பிளஸ் 2 தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், பருவ தேர்வுகளை நடத்தி முடிக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், தேர்தலுக்கு பின் பள்ளிகளில் மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும். மற்ற வகுப்புகளுக்கு ஏப்., 1 முதல் கோடை விடுமுறை விடுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.