நுண்ணீர்ப் பாசன வசதிக்கு அரசு மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!! - Tamil Crowd (Health Care)

நுண்ணீர்ப் பாசன வசதிக்கு அரசு மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!!

 நுண்ணீர்ப் பாசன வசதிக்கு அரசு மானியம்: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்..!!

கோவையில் நுண்ணீர்ப் பாசன வசதி செய்துகொள்ள அரசு மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

”நுண்ணீர்ப் பாசனம் அமைப்பது தற்போதைய கால சூழலுக்கு மிகவும் முக்கியமானதாகும். சொட்டு நீர், தண்ணீர் தூவுவான், தெளிப்பான் மூலம் தேவையான நீரை விரயமின்றிப் பயன்படுத்தலாம். இத்திட்டத்தின் மூலம் குறைந்த நீரில் அதிகப் பரப்பில் பயிர்கள் விளைவிக்கலாம். இதனால், 70 சதவீதம் வரை நீர் சேமிக்கப்படுகிறது. ரசாயன உரங்களை நீரில் கலந்து இடுவதால் 50 சதவீதம் வரை உரச் செலவு குறைகிறது. தண்ணீர் பாய்ச்சத் தேவையான ஆட்கூலி சேமிக்கப்படுகிறது.

இந்த செய்தியையும் படிங்க…

 வீடுகளுக்கான துல்லியமான மின்கட்டணத்தை கணக்கிட்டு செலுத்துவது எப்படி?… மின்வாரியத்துறை விளக்கம்..!! 

3 மடங்கு வரை அதிக மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைக்கிறது. குறைந்த அளவே களை வளர்ச்சி ஏற்படுகிறது. மேடுபள்ளமான பகுதிகளிலும் பயிர் சாகுபடி மேற்கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் அனைத்து சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெறலாம். சிறு, குறு விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள மானியத்தில் 100 சதவீதமும் (5 ஏக்கருக்குள் இருப்பின்), மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் (12.50 ஏக்கர் வரை) சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம்.

மேலும், நுண்ணீர் பாசனக் குழாய்கள் பதிக்கக் கரும்புப் பயிரைத் தவிர இதர பயிர்களுக்குப் பள்ளம் தோண்ட ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம் என்ற அளவில் 2 ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்துக்கு வேளாண்துறை மூலம் கோவை மாவட்டத்தில் 2,155 ஹெக்டேர் பரப்பளவுக்கு ரூ.14.32 கோடி மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பயன்பெற 

  • சிட்டா (கடந்த 6 மாதங்களுக்குள் எடுத்தது), 
  • ஆதார் அட்டை, 
  • நில வரைபடம், 
  • ரேஷன் அட்டை, 
  • கூட்டு வரைபடம், 
  • புகைப்படம், 
  • அடங்கல், 
  • நீர் மற்றும் மண் பரிசோதனைச் சான்று, 
  • சிறு, குறு, விவசாயி சான்று (6 மாதங்களுக்குள் பெறப்பட்டது) ஆகிய ஆவணங்கள் தேவை. 
  • தேவைப்படும் ஆவணங்களுடன் பயிர்த் தேவைக்கு ஏற்ப வட்டார வேளாண் விரிவாக்க மையங்களைத் தொடர்புகொண்டு விவசாயிகள் பயன்பெறலாம்”.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment