திமுக அளித்த 504 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்:பொருளாளர் டி.ஆர்.பாலு உறுதி
திமுக அளித்துள்ள அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதியின் தலைமைத் தேர்தல் பணிமனையை திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு நேற்று திறந்துவைத்தார். தொகுதி வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில் தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், பகுதிச் செயலாளர்கள் எம்.கிருஷ்ணமூர்த்தி, இரா.துரைராஜ், மாவட்ட அவைத் தலைவர் எஸ்.குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் டி.ஆர்.பாலு கூறியதாவது:
திமுக தேர்தல் அறிக்கைக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை திங்கள்கிழமை (இன்று) தொடங்குகிறார். திமுக அளித்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த முதல் மாதத்திலேயே மக்களுக்கு இது தெரியவரும். திமுக அளித்த 504 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இதில் எந்த சந்தேகமும் தேவை இல்லை. மேலும், சென்னை மேயராக மா.சுப்ரமணியன் இருந்தபோது செய்த பணிகள் அனைவருக்கும் தெரியும். அவரால் சைதாப்பேட்டை மக்கள் பயனடைந்தார்கள். எனவே, சைதை மக்கள் இமாலய வெற்றியை அவருக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.