திட்டமிட்டபடி பிளஸ் 2(+2) பொதுத்தேர்வு மே 3-ஆம் தேதி தொடங்கும்- தேர்வுத்துறை.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையற்று மூடப்பட்டன. இதையடுத்து மாணவா்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இணையவழி, கல்வித் தொலைக்காட்சி மூலமாக பாடங்கள் கற்பிக்கப்பட்டு வந்தன. அதன்பின்னா் கரோனா தாக்கம் குறைந்ததால், பொதுத்தேர்வை எழுதும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு கடந்த ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. தொடா்ந்து மே 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது.
ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதனால் அதற்கு மறுநாளான மே 3-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி தொடங்கப்படுமா? என கேள்விகள் எழுந்து வந்தன.
இது குறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், வாக்கு எண்ணும் பணிகள் கல்லூரிகளில் நடைபெறவுள்ளதால், தேர்வு மையங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதேவேளையில் ஆசிரியா்களுக்கு வாக்கு எண்ணும் பணியில் பெரிய அளவில் பங்கு இல்லை. எனவே பிளஸ் 2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். இது குறித்து பெற்றோா், மாணவா்கள், ஆசிரியா்கள் குழப்பமடையத் தேவையில்லை என அவா்கள் தெரிவித்தனா்.